விளையாட்டு

ஜப்பான் ஓபன்: சாய்னா, காஷ்யப் விலகல்

செய்திப்பிரிவு

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியிலிருந்து இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால், முன்னணி வீரர் காஷ்யப் ஆகியோர் விலகியுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் இப்போட்டியில் மற்றொரு முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து தலைமையில் இந்திய அணி பங்கேற்கிறது.

இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டி உள்ளிட்டவற்றில் தொடர்ச்சியாக விளையாடிய சாய்னா நெவாலுக்கு ஓய்வு தேவைப்படுவதால், அவர் ஜப்பான் ஓபனில் இருந்து விலகியுள்ளார். இந்திய பாட்மிண்டன் லீக் போட்டியின்போது ஏற்பட்ட கணுக்கால் காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாததால் காஷ்யப் விலகியுள்ளார்.

சாய்னாவும், காஷ்யப்பும் பங்கேற்காத நிலையில், இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு சிந்துவின் மீது திரும்பியுள்ளது. சீனாவில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற பிறகு சிந்து பங்கேற்கவுள்ள முதல் சர்வதேசப் போட்டி ஜப்பான் ஓபன் ஆகும்.

போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள சிந்து, தனது முதல் இரு சுற்றுகளில் தகுதிச்சுற்று வீராங்கனைகளை சந்திக்கிறார். இதனால் அவர் எளிதாக காலிறுதிக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிந்து, தனது காலிறுதியில் உலகின் முதல் நிலை வீராங்கனையும், ஒலிம்பிக் சாம்பியனுமான சீனாவின் லீ ஸியூரூயை சந்திக்க வாய்ப்புள்ளது.

ஆடவர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் காஷ்யப் விலகியுள்ள நிலையில், அஜய் ஜெயராம், சாய் பிரணீத், சௌரப் வர்மா, ஆனந்த் பவார், எச்.எஸ்.பிரணாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்களில் பவார், பிரணாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் தகுதிச்சுற்றின் மூலம் பிரதான சுற்றில் விளையாடுவதை உறுதி செய்துள்ளனர்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சமீத் ரெட்டி, மானு அத்ரி ஆகியோர் ஜோடி சேர்ந்து களமிறங்குகின்றனர். அதேநேரத்தில் மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் இந்தியாவின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

SCROLL FOR NEXT