விளையாட்டு

பரபரப்பான பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா 3 ரன்களில் வெற்றி

செய்திப்பிரிவு

நியூஸிலாந்துக்கு எதிரான பரபரப்பான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் 26 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அசத்தினார். அவர் 5 சிக்ஸர்களையும், 7 பவுண்டரிகளையும் பறக்கவிட்டார்.

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் வங்கதேசத்தில் தொடங்கியுள்ளது. இப்போது பயிற்சி ஆட்டங்களும், தகுதிச் சுற்று ஆட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டம் ஒன்றில் நியூஸிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர்.

முதல் ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வார்னர், ரன் கணக்கைத் தொடங்கினார். அடுத்த ஓவரில் பிஞ்ச் 2 பவுண்டரிகளை விரட்டினார். இருவரும் தொடர்ந்து பந்துகளை எல்லைக் கோட்டுக்கு வெளியே பறக்கவிட்டனர். இதனால் 5 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 70 ஆக உயர்ந்தது. அடுத்த ஓவரிலேயே வார்னர் அரைசதம் கடந்தார். இதில் 40 ரன்கள் சிக்ஸர் மற்றும் பவுண்டரி மூலம் கிடைத்தவை.

8-வது ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 113 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மற்ற வீரர்களுக்கும் பேட்டிங் வாய்ப்பை வழங்கும் வகையில் வார்னரும், பிஞ்சும் ஆட்டத்தை முடித்துக் கொண்டு ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினர்.

வார்னர் 26 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். பிஞ்ச் 22 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்தவர்களில் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். கேமரூன் வொயிட் 20 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. அடுத்து 201 ரன்களை இலக்காகக் கொண்டு நியூஸிலாந்து களமிறங்கியது. குப்தில், கேன் வில்லியம்ஸ் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆஸ்திரேலியா வீரர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருவருமே அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினர்.

எனினும் வில்லியம்சன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து குப்தில்லுடன் கேப்டன் மெக்குல்லம் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். 10 ஓவரின் முதல் பந்தில் மெக்குல்லம் ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், குப்திலின் அதிரடியால் நியூஸிலாந்து இலக்கை நோக்க விரைந்தது. குப்தில் 34 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்.

கடைசி ஓவரில் நியூஸிலாந்தின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 20 ஓவர் முடிவில் நியூஸிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.

இருபது ஓவர் உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா கருதப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர்.

SCROLL FOR NEXT