விளையாட்டு

தோனியிடம் புதுமையும் இல்லை முனைப்பும் இல்லை: ஹோல்டிங்

பிடிஐ

டெஸ்ட் போட்டிகளில் தோனியின் கேப்டன்சியில் புதுமையும் இல்லை, தன்முனைப்பும் இல்லை என்று மே.இ.தீவுகளின் முன்னால் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் சாடியுள்ளார்.

இந்திய ஒருநாள் போட்டி அணியை கேப்டன்சி செய்வது “அவ்வளவு கடினமான வேலையல்ல” என்று தான் உணர்வதாக ஹோல்டிங் தெரிவித்தார்.

"ஒருநாள் போட்டிகளில் தோனிக்குப் பிரச்சினை இல்லை, கடினமும் இல்லை, ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவரிடம் புதுமையும் இல்லை தன்முனைப்பும் இல்லை. ஒருநாள் அணியை கேப்டன்சி செய்வது கடினமல்ல. எனவே இந்த உலகக் கோப்பையில் இந்தியா நன்றாக ஆடும் என்பதில் ஐயமில்லை.

நாம் தோனியை மட்டும் ஏன் கூற வேண்டும், நிறைய சமகால இளஜ் வீரர்கள் குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளையே அதிகம் விரும்புகின்றனர்.

நிறைய சமகால வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் ஆடப் பிடிக்கிறது என்று நான் நம்பவில்லை. எனவே இது தோனிக்கு மட்டும் உகந்ததாக நாம் கூறுவதற்கில்லை. குறைந்த நேரம் விளையாடி அதிகப் பணம் கிடைக்கிறது என்றால் அதைத்தானே செய்ய விரும்புவார்கள்?

ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, குறிப்பாக இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாது. ஏனெனில் இது அந்த நாளுக்குரிய தன்மையுடன் கூடியது. சில பிரசித்தமான பெயர்கள் நம்மிடையே இருக்கிறது என்பதற்காக உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று கூற முடியாது.

கடந்த உலகக் கோப்பயில் இந்தியா வென்றதைப் பார்த்தால் அதிக ரன்களை எடுத்தனர். பெரிய இலக்குகளைத் துரத்தி வெற்றி பெற்றனர். அப்படியிருக்கும் போது பவுலிங் பற்றி பெரிய கவலை தேவையில்லை.

இஷாந்த் சர்மா இந்திய அணிக்கு பயனளிப்பார். புவனேஷ் குமார் வலுவானவர் அல்ல அவரை சிக்கனமாகப் பயன்படுத்தினால் இருவரும் நல்ல பங்களிப்பு செய்யக்கூடும்.” என்றார் மைக்கேல் ஹோல்டிங்.

தனது வேகத்தில் கடைசி வரை சமரசம் செய்து கொள்ளாத மைக்கேல் ஹோல்டிங் பந்து வீச்சை இங்கிலாந்து நடுவர் டிக்கி பேர்ட் ஒரு முறை வர்ணிக்கும் போது ‘கிசுகிசுக்கும் மரணம்’ என்றார். ஏனெனில் இவர் வீசும் வேகத்தை ஒப்பிடும்போது இவர் அளவுக்கு ஸ்மூத் ரன் அப் எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கும் இல்லை என்பதால் டிக்கி பேர்ட் அவ்வாறு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT