ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 231 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 448 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்ஸில் 216 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. போட்டியின் 4-வது நாளிலேயே முடிவு கிடைத்துவிட்டது.
தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 423 ரன்களுக்கும், ஆஸ்திரேலியா 246 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது 2-வது இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. இதையடுத்து 448 ரன்களை இலக்காகக் கொண்டு ஆஸ்திரேலியா விளையாடியது.
தொடக்க வீரர்கள் ரோஜர்ஸ், வார்னர் ஆகியோர் சிறப்பாக விளையாடி நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்களை எடுத்தது. வார்னர் 66 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் தென்னாப்பிரிக்க வேகப்பந்தை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் ரோஜர்ஸ் நிலைத்து நின்று விளையாடி 107 ரன்கள் வரை எடுத்தார். ஆனால் மறுமுனையில் டோலன், மார்ஸ், கேப்டன் கிளார்க், ஸ்மித், ஹேடின் என பேட்ஸ்மேன்கள் அனைவரும் இரட்டை இலக்க எண்களைக் கூட எட்ட முடியாமல் வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸ் ஆட்டத்தின் 4-வது நாளிலேயே 216 ரன்களுக்குள் முடிவுக்கு வந்தது.
முதல் இன்னிங்ஸில் இக்கட்டான சூழ்நிலையில் சதமடித்ததுடன், ஒட்டுமொத்தமாக 2 விக்கெட்டும் வீழ்த்திய தென்னாப்பிரிக்க வீரர் ஜே.பி. டுமினி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது.