கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சீனாவின் லீ நா அதிர்ச்சி தோல்வி கண்டார்.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3-வது சுற்றில் லீ நா 6-7 (2), 6-2, 4-6 என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீராங்கனையான செக்.குடியரசின் பெட்ரா செட்கோவ்ஸ்காவிடம் தோல்வி கண்டார்.
சர்வதேச தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் லீ நா எளிதாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின் முடிவை முற்றிலும் மாற்றிவிட்டார் தரவரிசையில் 134-வது இடத்தில் இருக்கும் பெட்ரா.
2 மணி நேரம் 46 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் லீ நா சரிவிலிருந்து மீள்வதற்கு முயற்சித்தபோதும், அவர் செய்த தவறுகளும் அவரின் தாக்குதல் ஆட்டம் கட்டுக்குள் இல்லாமல்போனதும் அவருக்கு எதிராக அமைந்தன.
இது தொடர்பாக செட்கோவ்ஸ்கா கூறுகையில், “நானும் அதிக அளவில் களைப்படைந்துவிட்டேன். ஒவ்வொரு பந்தையும் சிறப்பாக எதிர்கொள்ள முயற்சித்தேன். இறுதியில் வெற்றி பெற்றிருப்பது வியப்பாக இருக்கிறது” என்றார்.
சீசனின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் வெற்றி பெற்று தனது 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றிய லீ நா, அதற்கடுத்த போட்டியிலேயே அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.