ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி யில் நியூஸிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் ஒருநாள் போட்டித் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து வென்றது.
ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நியூஸிலாந்தில் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந் நிலையில் 3-வது ஒருநாள் போட்டி ஹாமில்டன் நகரில் நேற்று நடந்தது.
டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 281 ரன்களைக் குவித் தது. ராஸ் டெய்லர் அதிகபட்சமாக 101 பந்துகளில் 107 ரன்களைச் சேர்த்து நியூஸிலாந்து அணி வலு வான ஸ்கோரை எட்ட உதவினார். அவருக்கு துணையாக தொடக்க ஆட்டக்காரர் பிரவுனி 63 ரன்களை யும், வில்லியம்சன் 37 ரன்களை யும், சான்ட்னர் 38 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி யில் ஸ்டார்க், பாக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஹசல்வுட் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
வெற்றி பெற 282 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களை அவுட் ஆக்கி, அதன் பேட்டிங் முதுகெலும்பை டிரன்ட் போல்ட் உடைத்தார். 10 ஓவர்களில் 33 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த போல்ட் 6 விக்கெட்களை வீழ்த்த, ஆஸ்திரேலிய அணி 257 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் பின்ச் (56 ரன்கள்), ஹெட் (53 ரன்கள்), ஸ்டோய்னிஸ் (42 ரன்கள்) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு ரன்களைச் சேர்த்தனர்.
இப்போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூஸிலாந்து அணி, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக டிரன்ட் போல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.