விளையாட்டு

கடைசி ஓவரா?- அஷோக் டிண்டாவை சிதறடித்த ஹர்திக் பாண்டியா

இரா.முத்துக்குமார்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நேற்று புனே வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா ஐபிஎல் கிரிக்கெட்டின் கடைசி ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கிய பவுலர் என்ற சாதனைக்குரியவரானார்.

மும்பை இந்தியன்ஸ் அணி 19-வது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்திருந்தது. பும்ராவை முதலிலேயே முடித்து தவறு செய்தது மும்பை இந்தியன்ஸ்.

அசோக் டிண்டாவும் 3 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்த நிலையில் கடைசி ஓவரில் பந்து வீச அழைக்கப்பட்டார்.

ஆனால் ஹர்திக் பாண்டியா என்ன மூடில் இருந்தார் என்று தெரியவில்லை... டிண்டாவை கேட்டுக் கேட்டு அடித்தார்.

முதல் பந்து ஆஃப் திசையில் வாகான ஃபுல்டாஸ் கவரில் சிக்ஸ். அடுத்த பந்து லெந்த் பந்து லாங் ஆஃபில் சிக்ஸ். அடுத்த பந்து வைடு ஆஃப் த கிரீசிலிருந்து ஃபுல் லெந்தில் வீசினார் அப்போது பாண்டியா பின்னால் ஹெலிகாப்டர் ஷாட்டின் மாஸ்டர் தோனி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர் பாணியில் கீழ்க்கையை அழுத்தி லாங் ஆனுக்கு மேல் ஒரே தூக்கு சிக்ஸ். அடுத்த பந்து தோனியின் நீட்டிய கைகளுக்கு அகப்படாமல் ஒரு பவுண்டரி, பிறகு கடைசியில் ஷார்ட் ஆஃப் லெந்த் வீசினார் அதனை லாங் ஆனில் சிக்ஸ் விளாசினார் பாண்டியா.

4 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் கடைசி ஓவரில் 30 ரன்கள் விளாசப்பட மும்பை இண்டியன்ஸ் 154 ரன்களிலிருந்து 184 ரன்களுக்கு ஒரே தாவாகத் தாவியது. அசோக் டிண்டா 4 ஓவர்களில் 57 ரன்கள் என்று சிதைந்தார்.

2013-ல் ஒருமுறை டிவில்லியர்ஸிடம் கடைசி ஓவரில் சிக்கி 26 ரன்கள் விளாசப்பட்டார். 2011-ல் இதே போல் கடைசி ஒவரில் 26 ரன்களை கொடுத்தார்.

இது வரை 20 முறை 20-வது ஓவரை வீசியுள்ள அசோக் டிண்டா அதில் 272 ரன்களை ஓவருக்கு சராசரியாக 13.6 ரன்கள் என்ற விகிதத்தில் கொடுத்துள்ளார்.

அதே போல்தான் புனே அணி இலக்கைத் துரத்திய போது கடைசி ஓவரில் வெற்றிக்குத் தேவை 13 ரன்கள் என்ற நிலையில் பொலார்ட் முதல் 3 பந்துகளில் 3 ரன்களையே விட்டுக் கொடுத்தார், தோனி பந்தை சரியாக டைம் செய்ய முடியவில்லை.

ஆனால் எப்படியோ ஸ்ட்ரைக்கை ஸ்மித் கையில் கொடுக்க ஸ்மித், பொலார்டை இரண்டு அபாரமான சிக்சர்களை அடித்தார். வேகம் குறைந்த பந்து ஒன்றை ஸ்மித் உண்மையில் செம வாங்கு வாங்கினார். லாங் ஆனில் சிக்ஸ் ஆனது, அடுத்ததாக ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து கொண்டு மிட்விக்கெட் மேல் தூக்கினார் சிக்சருக்கு ஆட்டம் முடிந்தது புனே வெற்றி, ஸ்மித் 54 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 84 நாட் அவுட்.

SCROLL FOR NEXT