விளையாட்டு

கடைசி பந்து வரை எந்த ஒரு வீரரும் களத்தில் தீவிரம் காட்ட வேண்டும்: கண்டிப்பான கும்ப்ளேவுக்கு ஹர்பஜன் ஆதரவு

ஐஏஎன்எஸ்

இந்தியப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கு, முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அனில் கும்ப்ளேவுக்கு மாற்று அவ்வளவு எளிதில் கிடைக்காது என்றும் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளரும், தற்போதைய பயிற்சியாளருமான அனில் கும்ப்ளேவுக்கும், அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட இன்னும் சில வீரர்களுக்கும் இடையே உரசல் இருப்பதாக செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடியும்போது அனில் கும்ப்ளேவின் ஒரு வருட ஒப்பந்தமும் முடிவுக்கு வருவதால் இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்தது.

அனில் கும்ப்ளேவின் ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் புதிய பயிற்சியாளரை வாரியம் தேடுவது அவருக்கு அணி வீரர்களுடன் உரசல் என்ற செய்தியை உறுதிபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஆனால் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது சக வீரரான அனில் கும்ப்ளேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

"அனில் கும்ப்ளே கண்டிப்பானவர். அவரிடம் கிரிக்கெட்டைப் பற்றி எப்போது வேண்டுமானாலும் பேசலாம். கடின உழைப்பாளி. ஆட்டத்தின் கடைசி பந்து வரை எந்த வீரரும் அங்கிருந்து நகரக் கூடாது என்று நினைப்பார். கண்டிப்பானவராக இருந்தாலும் திறமையை விட கடின உழைப்புக்கு மதிப்பளிப்பவர். ஒரு பயிற்ச்சியாளராக கண்டிப்பாக இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் நிறைய நல்ல விஷயங்களை கொண்டு வருவார். அவர் முயற்சிகளுக்கான பலனை கடந்த வருட வெற்றிகளே சொல்லும்.

அவருடன் நான் ஆடிய 15 வருடங்களில், எங்களுக்குள் எந்த சண்டையும் வந்ததில்லை. கிரிக்கெட்டில் சிறந்த பவுலர் அவர். எப்போதும் உதவி செய்ய தயாராக இருப்பவர். நான் இன்று இருக்கும் நிலைக்கு அவர் ஒரு முக்கியக் காரணம். அதற்கு நான் அவருக்கு நன்றி கூற விரும்புகிறேன்.

நான் இப்போது அணியில் இல்லை. இப்போது அணியில் இருப்பவர்களே அவருடனான உறவைப் பற்றி சொல்ல முடியும். அவர் எப்படி அணியை வழிநடத்துகிறார் என எனக்குத் தெரியாது. வீரர்களிடம் என்ன நடக்கிறது என பேசித் தெரிந்துகொண்டதும் இல்லை. அவரிடம் எதாவது பிரச்சினை இருந்தால் நேரடியாக அவரிடமே சென்றும் பேசலாம். ஏனென்றால் அவர் மரியாதைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். எனது அனுபவத்தின்படி அவருக்கு யாருடன் பிரச்சினை இருக்க முடியாது.

பிரச்சினை என்று ஒன்று இருந்தால் பேசினால் தீரும். அவர் மிகத் திறமையானவர். அவருக்கு மாற்று கண்டுபிடிப்பது எளிதல்ல" இவ்வாறு ஹர்பஜன் பேசியுள்ளார்.

SCROLL FOR NEXT