விளையாட்டு

இந்திய அணி பயிற்சியாளரா? - ஷேன் வார்னே பதிலும், தவறான சித்தரிப்பும்

ஐஏஎன்எஸ்

இந்தியப் பயிற்சியாளராக உங்களை அணுகினார்களா என்று கேட்டதற்கு தான் கூறிய பதிலை ஊடகங்கள் தவறாக சித்தரித்துவிட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே விமர்சித்துள்ளார்.

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை இந்திய கிரிக்கெட் வாரியம் தேட ஆரம்பித்துவிட்டது. இந்திய முன்னாள் வீரர் சேவாக், தற்போதைய பயிற்சியாளர் அனில் கும்ப்ளே உட்பட பலர் அந்த பதவிக்கு விண்ணபித்துள்ளனர்.

முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான ஷேன் வாரனேவிடம், இந்திய பயிற்சியாளராக விண்ணப்பம் அளித்துள்ளீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு, "எனது சம்பளம் பிசிசிஐக்கு கட்டுப்படி ஆகாது. நானும் விராட் கோலியும் சிறப்பான இணையாக செயல்படுவோம். ஆனால் என்ன செய்ய, எனது சம்பளம் கட்டுப்படி ஆகாது" என ஷேன் வார்னே பதில் சொன்னதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. தற்போது இது தவறான செய்தி என வார்னே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

"நான் லிஃப்டில் சென்று கொண்டிருக்கும்போது இந்திய பயிற்சியாளர் பொறுப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு நகைச்சுவையாக இந்தியாவுக்கு கட்டுபடியாகாது என சொன்னேன். அது வெறும் நகைச்சுவை மட்டுமே.

நானும் விராட் கோலியும் சிறப்பாக இணைந்து செயல்படுவோம் என்று நான் சொல்லவே இல்லை. அப்படியான செய்தி முற்றிலும் பொய்யே. மிகவும் ஏமாற்றம் தரும் செய்திகள் இவை" என தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT