விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் வாவ்ரிங்கா, பெடரர்: மகளிர் பிரிவில் வீனஸ், வான்டேவேக் அசத்தல்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, ரோஜடர் பெடரர், வீனஸ் வில்லியம்ஸ், வான்டேவேக் ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறினர். கலப்பு இரட்டையர் பிரிவில் கேபரியலா டப்ரோவ்ஸ்கி, ரோகன் போபண்ணா மற்றும் சானியா மிர்சா, இவான் டு டிக் ஜோடி கால் இறுதிக்கு முன்னேறியது.

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 4-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, 12-ம் நிலை வீரரான பிரான்சின் ஜோ வில்பிரைடு சோங்காவை எதிர்த்து விளையாடினார்.

சுமார் 2 மணி நேரம் 14 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வாவ்ரிங்கா 7-6, 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். 2014-ல் சாம்பியன் பட்டம் சென்ற வாவ்ரிங்கா ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதியில் கால்பதிப்பது இது 3-வது முறை யாகும்.

மற்றொரு கால் இறுதியில் 17-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 50-ம் நிலை வீரரான ஜெர்மனியின் மிஸ்சா ஜிவேரெவை எதிர்த்து விளையாடினார். இதில் 4 முறை சாம்பியனான பெடரர் 6-1, 7-5, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதியில் நுழைந்தார். அரை இறுதியில் வாவ்ரிங்கா - பெடரர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 13-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 7-6 என்ற நேர் செட்டில் 24-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனஷ்டசியா பாவ்லிஷென்கோவாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபன் அரை அரை இறுதியில் வீனஸ் நுழைவது இது 3-வது முறையாகும். கடைசியாக 2003-ல் அவர் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தார்.

36 வயதான வீனஸ் வில்லியம்ஸ், ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் அதிக வயதுடைய வீராங்கனையாக இந்த சுற்றில் 23 வருடங்களுக்கு பிறகு காலடி எடுத்து வைக்கும் 2-வது வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா நவரத்திலோவா தனது 37 வயதில் கடந்த 1994-ம் ஆஸ்திரேலிய ஓபனில் அரை இறுதிக்கு முன்னேறிருந்தார்.

வீனஸ் வில்லியம்ஸ் அரை இறுதியில் சகநாட்டை சேர்ந்த வீராங்கனையான கோகோ வேன்டேவேக்குடன் மோது கிறார். 35-ம் நிலை வீராங்கனையான வேன்டேவேக், கால் இறுதியில் 7-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசாவை 6-4, 6-0 என்ற நேர் செட்டில் எளிதாக தோற்கடித்தார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வேன்டேவேக், அரை இறுதிக்கு முன்னேறுவது இதுவே முதன்முறை.

இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு விம்பிள்டனில் அதிகபட்சமாக கால் இறுதி வரை முன்னேறியிருந்தார். ஆஸ்திரேலிய ஓபனில் அதிகபட்சமாக கடந்த 2015-ம் ஆண்டு 3-வது சுற்று வரையே செல்லமுடிந்திருந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதியில் கனடாவின் கேபரியலா டப்ரோவ்ஸ்கி, இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி 6-4, 5-7, 10-3 என்ற செட் கணக்கில் சீனதைபேவின் யங் ஜன் ஷன், போலந்தின் லூக்காஸ் ஹூபோட் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.

இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி 2-6, 6-3, 10-6 என்ற செட் கணக்கில் சீனா வின் ஷாய் ஷாய் ஹெங், ஆஸ்திரியா வின் அலெக்சாண்டர் பெயா ஜோடியை வீழ்த்தி கால் இறுதியில் நுழைந்தது.

SCROLL FOR NEXT