இலங்கைக்கு எதிரான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி கண்டது. ஆல்ரவுண்டர் அப்ரிதி 20 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் குவித்து பாகிஸ்தானுக்கு வெற்றி தேடித்தந்தார்.
துபையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 19.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான், இலங்கையை பேட் செய்ய அழைத்தது. இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்கள் தில்ஷான் 7, குஷல் பெரேரா 15, பின்னர் வந்த கேப்டன் தினேஷ் சன்டிமால் 22, குமார் சங்ககாரா 21 ரன்களில் ஆட்டமிழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு இணைந்த மேத்யூஸ்-திரிமானி ஜோடி 58 ரன்கள் சேர்த்தது. மேத்யூஸ் 34 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. திரிமானி 16 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரிகளுடன் 23, திசாரா பெரேரா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் சோஹைல் தன்வீர், சயீத் அஜ்மல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாஹித் அப்ரிதி 4 ஓவர்களில் 20 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.
146 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் அஹமது ஷெஸாத் 4 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், சர்ஜீல் கான் - கேப்டன் முகமது ஹபீஸ் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்து பாகிஸ்தானுக்கு பலம் சேர்த்தது. சர்ஜீல் கான் 31 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 34, ஹபீஸ் 27 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதன்பிறகு வந்த உமர் அக்மல் 5, உமர் அமின் 8, சோயிப் மஸூத் 13 ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் சற்று தடுமாறியது. இதனால் அந்த அணி வெற்றி பெற கடைசி 5 ஓவர்களில் 43 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குலசேகரா வீசிய 16-வது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசிய அப்ரிதி, ஆட்டத்தின் போக்கை மாற்றினார். 17-வது ஓவரில் சோயிப் மஸூத் (13 ரன்கள்) ஆட்டமிழக்க, பாகிஸ்தானின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 25 ரன்கள் தேவைப்பட்டன.
பெரேரா வீசிய 18-வது ஓவரில் அப்ரிதி இரு பவுண்டரிகளை விளாச, அடுத்த ஓவரில் பிலவால் பட்டி 10 ரன்களில் ஆட்டமிழந்தார். குலசேகரா வீசிய கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து பாகிஸ்தானுக்கு வெற்றி தேடித்தந்தார் அப்ரிதி.
அப்ரிதி 39, சோஹைல் தன்வீர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் ஜொலித்த அப்ரிதி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இரு ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.