பாகிஸ்தான் அணி தங்கள் ஆட்டத்தை மேம்படுத்தவில்லையெனில் இனி ஆஸ்திரேலியாவுக்கு விளையாட அழைக்கப்படக்கூடாது என்று இயன் சாப்பல் கூறியதற்கு பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது மிஸ்பா உல் ஹக்கின் மோசமான கேப்டன்சி, அணியின் மோசமான பீல்டிங் ஆகியவற்றை சாடி இயன் சாப்பல் கூறும்போது, “ஆஸ்திரேலியாவில் இத்துடன் 12 போட்டிகளை பாகிஸ்தான் இழந்துள்ளது. முன்னேற்றம் இல்லையெனில் இனி அழைக்க முடியாது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறப் பழக வேண்டும். மோசமான கிரிக்கெட்டை தொடர்ந்து ஆட முடியாது. மோசமான பவுலிங், மிகவும் பழைய பாணி பீலிட்ங் செட்-அப், மோசமான பீல்டிங் ஆகியவற்றைக் கொண்டு ஆஸ்திரேலியாவில் ஓரளவுக்கு சுமாரான கிரிக்கெட்டை கூட எப்படி வெளிப்படுத்த முடியும்?” என்று கடுமையாக சாடினார்.
இதனையடுத்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் எழுதிய பத்தியில் மிஸ்பா கூறியதாவது:
இயன் சாப்பல் போன்ற ஒரு ஆளுமை மிக்கவர் இத்தகைய தரக்குறைவான கருத்துகளை ஒரு அணியைப் பற்றி கூறுவது அழகல்ல. அயல்நாட்டுத் தொடர்களில் ஆஸ்திரேலியாவும் தோற்று வரும் அணியே. ஜெயவர்தனே, சங்கக்காரா இல்லாத அணியிடம் ஆஸ்திரேலியா கிளீன் ஸ்வீப் உதை வாங்கியது. சில இலங்கை வீரர்கள் 10 டெஸ்ட் போட்டிகளில் கூட ஆடாதவர்கள். ஆனால் அவர்களிடம் ஆஸி. கிளீன் ஸ்வீப் தோல்வி கண்டது.
தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் தொடரை 0-5 என்று ஆஸ்திரேலியா இழந்தது. நாங்களும், இந்தியாவும் ஆஸ்திரேலியாவுக்கு ஒயிட்வாஷ் கொடுத்தோம். எனவே சாப்பல் கூறிய கருத்துகளை ஆஸ்திரேலியாவுக்கு நாம் கையாண்டால், தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி துணைக்கண்டங்களில் ஒயிட் வாஷ் ஆகிறது எனவே ஆஸ்திரேலிய அணியை இனி அழைக்கக் கூடாது என்று கூறலாமா? அவர்கள் இங்கு விளையாடாமலும் துணைக் கண்ட அணிகள் ஆஸ்திரேலியாவில் விளையாடாமலும் இருந்தாம் மேம்படுவது எப்படி? என்று கூறினார். ஆனால் இதோடு நிறுத்தாமல், 1999-ல் சிறந்த நட்சத்திர பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலியாவிடம் ஒயிட்வாஷ் ஆனது என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
“ஆம்! ஒருவிதத்தில் பார்த்தால் 1999-ம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்த பாகிஸ்தான் அணியில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், சக்லைன் ஆகியோர் இருந்தனர். முஷ்டாக் அகமது இருந்தார், சயீத் அன்வர், மொகமது யூஸுப், இன்சமாம் உல் ஹக், இஜாஜ் அகமது போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தனர். ஆனால் தொடரை இழந்தோம்” என்றார். இது சர்ச்சையைக் கிளப்ப, உடனே, நான் அவர்களை மரியாதை குறைவாக பேசவில்லை என்று பல்டி அடித்தார் மிஸ்பா.