இலங்கைக்கு எதிராக 0-3 என்று ஒயிட்வாஷ் ஆன ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் தான் அவுட் ஆன ஷாட், ஹெராத்தின் அபாரப் பந்து வீச்சு குறித்து விரிவாகப் பேசினார்.
அப்போது ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து நீங்கள் ஓய்வு பெற்றது நல்லதே, நான் கொஞ்சம் ரன்கள் அடித்துக் கொள்கிறேன் என்று ரங்கனா ஹெராத்திடம் நட்பு முறையில் நகைச்சுவையாகக் கூறியதாக ஆஸி. கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தியில் ஸ்மித் கூறியிருப்பதாவது:
குறைந்தது ஒருநாள் போட்டிகளில் ரங்கனா ஹெராத் இல்லை என்பதை அறிகிறேன். அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவருக்கு 37 வயதாகியிருக்கலாம் ஆனாலும் இன்னும் ஒரு அபாரமான பவுலர்தான் அவர். இந்தத் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் என்னை 5 முறை வீழ்த்தியுள்ளார்.
ஹெராத்திற்கு எதிராக ரன்களை முயன்றே எடுக்க முடியும். அவர் ரன் கொடுக்கும் பந்துகளை அதிகம் வீசாதவர். நாம் நம் ஆட்டத்தின் உச்சத்தில் எப்போதும் இருப்பதுடன் மிகவும் கவனமாக இருப்பதும் அவசியம். அவரே அவர் பந்து எவ்வளவு திரும்பும் என்று தெரியாது என்று கூறுகிறார், அவருக்கே தெரியாது என்றால் பேட்ஸ்மென்களுக்கு ஏது வாய்ப்பு?
இலங்கை வீரர்களுடன் டிரிங்க்ஸ் செய்த போது, ஹெராத்திடம் நட்பு முறையில் பேசினேன், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து நீங்கள் விலகியது நல்லதாகப் போய்விட்டது, ஏனெனில் நான் கொஞ்சம் ரன்கள் எடுத்துக் கொள்கிறேன் என்று ஜோக் அடித்தேன்.
அவரும் தனது பந்து வீச்சை முழுதும் விளக்கினார், கையை உயர்த்துவது, தாழ்த்துவதன் மூலம் பந்தின் போக்கை அவர் எப்படி மாற்றுகிறார் என்பதை என்னிடம் பெருந்தன்மையாகக் கூறினார். அதே போல் காற்றடிக்கும் போது பந்தின் பளபளப்பு பகுதியை வெளிப்புறமாக வைத்து எப்படி ‘டிரிஃப்ட்’ உருவாக்குகிறார் என்பதையும் கூறினார்.
நான் பொதுவாக எதிரணி வீரர்களிடம் அவ்வளவாக ஓபனாக பேசாதவன். ஆனால் அவர் என்னை அடிக்கடி அவுட் செய்யும் போது, நான் அவரிடம் பேசியாக வேண்டும். அவர் திறந்த மனதுடன் என்னிடம் பேசியதற்காக நான் அவரை பாராட்டுகிறேன்.
இந்தத் தொடரில் நான் கட் செய்ய முயன்று அவுட் ஆனதை முற்றிலும் வெறுக்கிறேன், அதனைச் செய்யக்கூடாது என்று நினைத்தாலும் பயிற்சியில் இந்த ஷாட்டை அதிகம் ஆடியதால் முயற்சி செய்து தோல்வி அடைந்தேன், பந்துகள் தாழ்வாக வரும்போது நேர் பேட்டில் ஆட வேண்டும், எனது அவுட்கள் என் தலையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. நிச்சயம் அடுத்த முறை இந்தத் தவறுகளை செய்யப்போவதில்லை.
இவ்வாறு ஸ்மித் கூறியுள்ளார்.