இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.
தென் ஆப்பிரிக்க வீரர்கள் டூ பிளெஸ்ஸிஸ், டிவில்லியர்ஸ் ஆகியோர் சதமடித்தபோதும், கடைசிக் கட்டத்தில் டூ பிளெஸ்ஸிஸ் ரன்அவுட் ஆனதால் தென் ஆப்பிரிக்காவால் வெற்றி பெற முடியாமல் போனது. இதனால் இந்தியா தோல்வியில் இருந்து தப்பியது.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 103 ஓவர்களில் 280 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 75.3 ஓவர்களில் 244 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தன. பின்னர் 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 120.4 ஓவர்களில் 421 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து 458 ரன்கள் என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 4-வது நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 45 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்திருந்தது. பீட்டர்சன் 148 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 76,
டூ பிளெஸ்ஸிஸ் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா ஆட்டம் தொடங்கிய 4-வது ஓவரிலேயே பீட்டர்சனின் விக்கெட்டை இழந்தது. அவர் 162 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்து சமி பந்துவீச்சில் போல்டு ஆனார். இதையடுத்து டூ பிளெஸ்ஸிஸுடன் இணைந்தார் ஜாக்ஸ் காலிஸ்.
இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது. 37 பந்துகளைச் சந்தித்த காலிஸ் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ஜாகீர் கான் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
நங்கூரமாய் நின்ற டூ பிளெஸ்ஸிஸ்
இதையடுத்து டூ பிளெஸ்ஸிஸுடன் ஜோடி சேர்ந்தார் டிவில்லியர்ஸ். அப்போது தென் ஆப்பிரிக்கா 60.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணி வெற்றிபெற 261 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.
இதனால் எப்படியும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திவிடலாம் என்று நினைத்திருந்த இந்தியாவின் கனவை டூபிளெஸ்ஸிஸ்-டிவில்லியர்ஸ் ஜோடி தகர்த்தது. இந்த ஜோடியைப் பிரிக்க இந்திய கேப்டன் தோனி 7 பௌலர்களைப் பயன்படுத்தியபோதும் பலன் கிடைக்கவில்லை. தடுப்பாட்டம் ஆடிய டூ பிளெஸ்ஸிஸ் 252 பந்துகளில் சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் டூ பிளெஸ்ஸிஸ் அடித்த 3-வது சதம் இது.
அவரைத் தொடர்ந்து டிவில்லியர்ஸும் (162 பந்துகளில்) சதமடித்தார். டிவில்லியர்ஸுக்கு இது 18-வது சதமாகும். இருவரும் தொடர்ந்து வேகமாக விளையாட 122 ஓவர்களில் 400 ரன்களை எட்டியது தென் ஆப்பிரிக்கா.
திருப்புமுனை
123-ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, டிவில்லியர்ஸை கிளீன் போல்டாக்கினார். 168 பந்துகளைச் சந்தித்த டிவில்லியர்ஸ் 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்தார். டிவில்லியர்ஸ்-டூ பிளெஸ்ஸிஸ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 205 ரன்கள் சேர்த்தது.
பின்னர் வந்த டுமினி 5 ரன்களில் ஆட்டமிழக்க, பிலாண்டர் களம்புகுந்தார்.
தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் டூ பிளெஸ்ஸில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். அவர் 309 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் எடுத்தார்.
இதுதான் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. பிலாண்டருடன் ஜோடி சேர்ந்தார் ஸ்டெயின். இதன்பிறகு தென் ஆப்பிரிக்கா வெற்றிபெறும் முயற்சியை கைவிட்டுவிட்டு, டிரா செய்யும் முயற்சியில் இறங்கியது. அடுத்த 3.1 ஓவர்களில் இந்த ஜோடி 8 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 136 ஓவர்களில் 450 ரன்கள் எடுத்து 8 ரன்களில் வெற்றி பெறும் வாய்ப்பை இழந்தது.
பிலாண்டர் 25, ஸ்டெயின் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி டர்பனில் தொடங்குகிறது.