விளையாட்டு

3-வது போட்டியில் தடுமாறி வென்று ஆஸ்திரேலியா முன்னிலை

ஏஎஃப்பி

தம்புல்லாவில் நடைபெற்ற 3-வது ஒரு நாள் போட்டியில் இலங்கையை போராடி வீழ்த்தி ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் 2-1 என்று முன்னிலை பெற்றது.

முதலில் பேட் செய்த இலங்கை 226 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 46-வது ஓவரில் இலக்கை எட்டி வென்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று முன்னிலை பெற்றது.

ஸ்மித் திரும்ப அழைக்கப்பட்டதால், வார்னர் தலைமை ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. 227 ரன்களே வெற்றி இலக்கு என்றாலும் தொடக்கத்திலும் பிறகு கடைசியிலும் விக்கெட்டுகளை மடமடவென இழந்து பதற்றத்துடன் வென்றது ஆஸ்திரேலியா.

முதல் 10 ஓவர்களில் டேவிட் வார்னர் (10), ஏரோன் பிஞ்ச் (30), ஷான் மார்ஷ் (1) ஆகியோரை ஆஞ்சேலோ மேத்யூஸ், இடது கை சுழற்பந்து வீச்சாளர் அபான்சோ ஆகியோர் வீழ்த்த 44/3 என்று ஆனது ஆஸ்திரேலியா. இதில் வார்னருக்கு தில்ஷன் டைவ் அடித்து பாயிண்டில் பிடித்த கேட்ச் அபாரம். டிராவிஸ் ஹெட் (36), ஜார்ஜ் பெய்லி இணைந்து ஸ்கோரை 104 ரன்களுக்கு உயர்த்திய போது ஹெட், திலுருவன் பெரேரா பந்தில் பவுல்டு ஆனார். 106/4. ஜார்ஜ் பெய்லியுடன், விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் இணைந்து ஸ்கோரை 187 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.

அப்போது மேத்யூ வேட் 46 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்து திலுருவன் பெரேராவிடம் ஸ்டம்ப்டு ஆனார். இங்கிருந்து 187/4 லிருந்து 222/8 என்று ஆனது ஆஸ்திரேலியா. ஜார்ஜ் பெய்லி 99 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 70 ரன்கள் எடுத்து ஆடி வந்த நிலையில் சீகுகே பிரசன்னாவின் லெக் பிரெக்கில் பவுல்டு ஆனார். அடுத்த ஓவரில் ஜேம்ஸ் பாக்னர், அபான்ஸோ பந்தில் டீப்பில் கேட்ச் கொடுத்து லெக்திசை கேட்சுக்கு வெளியேறினார். மிட்செல் ஸ்டார்க் இறங்கி 1 பவுண்டரி, பிரசன்னா பந்தில் லாங் ஆனில் ஒரு சிக்ஸ் அடித்து அடுத்த ஓவரில் தனஞ்சய டிசில்வாவையும் அடிக்கும் முயற்சியில் வீழ்ந்தார்.

வெற்றி பெற 5 ரன்கள் தேவை என்ற நிலையில் இலங்கை ஸ்பின்னர்களின் நெருக்குதலுடன் ஸாம்பா இறங்கினார். ஆனால் இலங்கையினால் 2 விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. 46-வது ஓவரில் ஆஸ்திரேலியா 227/8 என்று வெற்றி பெற்றது.

சந்திமால் சதம்:

முன்னதாக இலங்கை அணியில் விக்கெட்டுகள் சீரான இடைவெளிகளில் விழுந்து கொண்டிருந்தன. தில்ஷனும், சந்திமாலும் ஒரே அரைசதக் கூட்டணியாக 73 ரன்களைச் சேர்த்தனர். லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா மீண்டும் அருமையாக வீசி 10 ஓவர்களில் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்டார்க், பாக்னர், ஹேஸ்டிங்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

சந்திமால் அபாரமாக ஆடி தனது 4-வது ஒருநாள் சதம் அடித்தார். 130 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் எடுத்து பாக்னரிடம் கடைசி விக்கெட்டாக அவுட் ஆனார். இவர் இன்னிங்ஸை பில்ட் செய்பவர், அதனால்தான் இந்த இன்னிங்ஸில் பவுலர்கள் தவறு செய்யும் போது மட்டும் பவுண்டரி இல்லையெனில் சிங்கிள்கள்தான், இவ்வகையில் 56 சிங்கிள்களை எடுத்தார் சந்திமால்.

சந்திமால் கடைசி 7 ஒருநாள் போட்டிகளில் எடுத்த ரன்கள்: 52, 62, 63, 53, 80 நாட் அவுட், 48, 102. ஆட்ட நாயகனாக ஜார்ஜ் பெய்லி தேர்வு செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT