விளையாட்டு

துபை டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச், ஃபெடரர்

செய்திப்பிரிவு

துபையில் நடைபெற்று வரும் துபை “டியூட்டி ப்ரீ” டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவரான ஜோகோவிச் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பௌதிஸ்டாவை வீழ்த்தி காலிறுதியை உறுதி செய்தார். 57 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் அபாரமாக ஆடிய ஜோகோவிச் 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதன்பிறகு பௌதிஸ்டா தனது ஒரே சர்வீஸை மட்டும் தக்கவைத்தார். இதனால் 7-வது கேமோடு முதல் செட் முடிவுக்கு வந்தது.

பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் ஒரு கட்டத்தில் 5-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த ஜோகோவிச், 8-வது கேமில் தனது சர்வீஸை இழந்தார். எனினும் அடுத்த கேமில் பௌதிஸ்டாவின் சர்வீஸை முறியடித்து வெற்றி கண்டார் ஜோகோவிச்.

வெற்றிக்கு பிறகு பேசிய ஜோகோவிச், “இந்தப் போட்டியின் ஆரம்பம் முதல் கடைசி வரை நான் சிறப்பாகவே விளையாடினேன். அதனால் இந்தப் போட்டியில் ஏற்றமோ, இறக்கமோ இல்லை. குறிப்பாக எனது சர்வீஸ் எனக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது” என்றார்.

ஜோகோவிச் தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவரான ரஷியாவின் மிகைல் யூஸ்னியை சந்திக்கிறார். யூஸ்னி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-1, 7-6 (3) என்ற நேர் செட்களில் வைல்ட்கார்ட் வீரரான பிரிட்டனின் ஜேம்ஸ் வார்டை தோற்கடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் கடும் போராட்டத்துக்குப் பிறகு 6-2, 6-7 (4) 6-3 என்ற செட் கணக்கில் செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானக்கை தோற்கடித்தார்.

2 மணி நேரம் 8 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் ஸ்டெபானெக்கிற்கு எதிராக 12-வது வெற்றியைப் பதிவு செய்தார் ஃபெடரர். 2008 முதல் தற்போது வரையில் மோதிய 9 ஆட்டங்களிலும் ஃபெடரரே வெற்றி கண்டுள்ளார். ஃபெடரருக்கு எதிராக ஸ்டெபானெக் இரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஃபெடரர், “4 முறை எனது சர்வீஸ் முறியடிக்கப்பட்டது. இது கடினமானதாகும். ஆனால் இதுபோன்ற போட்டிகளில் வெற்றி பெறுவது சிறந்தது” என்றார். ஃபெடரர் தனது காலிறுதியில் செக்.குடியரசின் லூகாஸ் ரசூலை சந்திக்கிறார்.

SCROLL FOR NEXT