ரவிசாஸ்திரியிடம் பெரிய அளவில் திறமை கிடையாது, ஆனால் அவர் தனது அசைக்க முடியாத உறுதியினால் பெரிய அளவில் கிரிக்கெட் ஆட்டத்தை ஆடினார் என்று கபில்தேவ் புகழ்ந்து பேசியுள்ளார்.
‘நம்பர்ஸ் டு லை’ என்ற புத்தக அறிமுக விழாவில் கபில்தேவ் இதனை தெரிவித்தார்.
“ரவி சாஸ்திரியிடம் பெரிய திறமையில்லை, ஆனால் அவர் பெரிய கிரிக்கெட் ஆட்டத்தை ஆடினார், இதற்கான பெருமையை அவருக்கு நாம் அளித்தேயாக வேண்டும். இரண்டு வகையான கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர், நிறைய திறமையிருக்கும் ஆனால் சோபிக்க முடியாது.
ஆனால் திறமை என்று பார்த்தால் பெரிதாக இருக்காது, ஆனால் பெரிய அளவில் ஆடுவார்கள், ரவிசாஸ்திரியிடம் அதீதமான உறுதிப்பாடு உண்டு. இதனை நாங்கள் எப்போதுமே மதித்திருக்கிறோம். ரவிசாஸ்திரி முகத்திற்கெதிராகவே இதனை கூறுவேன். அதே போல் அனில் கும்ப்ளே... இவரும் உடல்திறனுக்கு பெயர் பெற்றவர் கிடையாது. ஆனால் அவரது ஆட்டத்தைப் பாருங்கள் அவரை விட சிறப்பாக யாரும் செயல்பட்டிருக்க முடியாது” என்றார் கபில் தேவ்.
1981 முதல் 1992 வரை இந்தியாவுக்காக ஆடியுள்ள ரவிசாஸ்திரி 80 டெஸ்ட் போட்டிகளிலும் 150 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார். 1983 உலகக்கோப்பையை கபில்தேவ் தலைமையில் வென்ற போது, மே.இ.தீவுகளை முதல் போட்டியிலேயே வீழ்த்திய போது, கடைசியில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு அந்த இளம் வயதில் பங்களிப்பு செய்துள்ளார்.
பிறகு படிப்படியாக அவர் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு தொடக்க வீரராக ஆனார். சிட்னியில் சச்சினும் இவரும் சேர்ந்து ஆடிய அந்த இன்னிங்சை யாரும் மறக்க முடியாது, ரவி சாஸ்திரி 206 ரன்களை எடுத்தார். அதே போல் முதன் முதலாக இங்கிலாந்தில் தொடக்க வீரராகக் களமிறங்கிய போது ரவிசாஸ்திரி கடினமான பிட்சில் கடினமான இங்கிலாந்து பந்து வீச்சில் 66 ரன்களை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
பிறகு பாகிஸ்தானில் மிகவும் பகைமையான ஒரு தொடரில் கராச்சியில் ரவிசாஸ்திரி அனைத்து தடைகளையும் கடந்து (நடுவர் மோசடிகள் உட்பட) சதம் எடுத்ததையும் மறக்க முடியாது. மே.இ.தீவுகளுக்கு எதிராக அங்கே எமகாதகப் பவுலர்களுக்கு எதிராக சாஸ்திரி எடுத்த சதத்தையும் மறக்க முடியாது.
ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 1985 மினி உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டு ஆடிகார் பரிசு பெற்றதும் ரவிசாஸ்திரி கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களாகும். இம்ரான் உள்ளிட்ட பவுலர்களை நடந்து வந்து வெளுத்துக் கட்டிய காலங்களும் உண்டு.
இந்நிலையில் ரவிசாஸ்திரியை இவ்வாறு புகழ்ந்து கூறியுள்ளார் கபில்தேவ்.