விளையாட்டு

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி: வெள்ளிப்பதக்கம் வென்று தூத்துக்குடி எஸ்பி சாதனை

செய்திப்பிரிவு

அசாமில் நடைபெற்ற அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில், ரைபிள் பிரிவில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அஸ்வின் எம். கோட்னீஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தமிழகத்திலிருந்து பதக்கம் வென்ற முதல் ஐபிஎஸ் அதிகாரி என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

17-வது அகில இந்திய போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டி அசாம் மாநிலம் குவாஹாட்டியில் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இதில், பல்வேறு மாநில காவல்துறை அணிகள், பிஎஸ்எப், சிஐஎஸ்எப், சிஆர்பிஎப் உள்ளிட்ட துணை ராணுவப்படை அணிகள் உட்பட 33-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.

தமிழக அணியில் இடம் பெற்றிருந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அஸ்வின் எம். கோட்னீஸ், நேற்று நடந்த 300 கஜ தொலைவு ரைபிள் போட்டியில் கலந்து கொண்டார். இப்போட்டியில் அவர் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இப்பிரிவில் ராஜஸ்தான் வீரர் தங்கப் பதக்கத்தையும், கேரள வீரர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

டிஜிபி பாராட்டு

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில், தமிழகத்திலிருந்து பங்கேற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ரைபிள் பிரிவில் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை ஆகும். இதற்காக அஸ்வின் எம்.கோட்னீஸ்க்கு தமிழக டிஜிபி டி.கே ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார். சக போலீஸ் அதிகாரிகளும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT