ஐசிசி தலைவர் பதவியை ஷசாங் மனோகர் ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐயின் தலைவராக பணியாற்றிய ஷசாங் மனோகர் கடந்த வருடம் மே மாதம் ஐசிசியின் முதல் சுயாதீன தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2 வருட காலம் கொண்ட இந்த பதவியில் 8 மாதங்கள் மட்டுமே நீடித்த நிலையில் அவர் விலகி உள்ளார். இவரது பதவி காலத்தில் பிசிசிஐ, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய கிரிக்கெட் வாரியங்களின் அதிகார மையத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அதிகாரப்பரவலுக்காக பாடுபட்டார்.
ஆனால் பிசிசிஐ தன் பக்கம் இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய வாரியங்களை இழுத்துள்ளதால் ஐசிசி-யின் எந்த ஒரு நிதிசார் சீர்த்திருத்தங்களுக்கும் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை வேண்டும் என்ற விதிமுறையின்படி சீர்த்திருத்தங்கள் சிக்கலாகும் என்று தெரிகிறது.
இந்நிலையில் தன் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே சஷாங் மனோகர் பதவியை ராஜினாமா செய்ததாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஐசிசியின் தலைமை செயல் அதிகாரியான டேவிட் ரிச்சர்ட்சனுக்கு ராஜினாமா கடிதத்தை சஷாங் மனோர் அனுப்பி வைத்தார். அதில், "நேர்மையாகவும், ஒருபக்க சார்பின்மையோடும் செயல்பட வேண்டும் என நான் முயற்சி செய்து வந்தேன். ஒரு சில சொந்த காரணங்களால் பதவியில் தொடர முடியாத நிலையில் உள்ளேன்.
இதை ஏற்றுக்கொண்டு என்னை பணியில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய அனைத்து இயக்குநர்களுக்கும், நிர்வாகத்துக்கும் மற்றும் துணையாக இருந்த அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் காலத்தில் ஐசிசி சிறந்த உச்ச நிலையை அடையும் என்ற நம்பிக்கை உள்ளது" என தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞரான சஷாங் மனோகர் கடந்த 2008 முதல் 2011 முதல் பிசிசிஐ தலைவராக பணியாற்றினார். இதன் பின்னர் ஜக்மோகன் டால்மியா மறைவை தொடர்ந்து 2015-ம் ஆண்டு மீண்டும் பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு போட்டியின்றி ஐசிசியின் தலைவராக அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.