விளையாட்டு

தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன்: விராட் கோலி

செய்திப்பிரிவு

நான் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன். போட்டியின்போது எதிராளி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தேவையற்றது என்பதை இப்போது உணர்ந்திருக்கிறேன் என்றார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி.

கிரிக்கெட்டில் அதிரடிக்கும், ஆக்ரோஷத்துக்கும் பெயர்போன கோலி, அதே அளவுக்கு களத்தில் வீரர்களிடம் சண்டையிடுவதிலும் பெயர் பெற்றவர். இதனால் அடிக்கடி விமர்சனத்துக்குள்ளான கோலி, இப்போது அதுபோன்ற வாக்குவாதம் தேவையில்லை என்பதை உணர்ந்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:

ஆரம்பத்தில் அடிக்கடி எதிரணி வீரர்களிடம் வாக்குவாதம் செய்து தவறிழைத்திருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அந்தத் தவறுகளை சர்வதேச கிரிக்கெட்டில் செய்யக்கூடாது என்பதை இப்போது உணர்ந்திருக்கிறேன். நான் இப்போது கொஞ்சம் முதிர்ச்சியடைந்திருக்கிறேன். முதல் போட்டியில்கூட நியூஸிலாந்து வீரர்கள் என்னை வெறுப்பேற்றினார்கள். ஆனால் நான் எதுவும் சொல்லாமல் பேட்டால் பதிலடி கொடுத்தேன். நீங்கள் களத்தில் இருக்கும்போது வார்த்தைகளால் மோதக்கூடாது. பேட்டால் மட்டுமே பதில் சொல்லவேண்டும்.

இப்போது எதிரணிகள் என்னை வீழ்த்த விரும்புகின்றன என்பது எனக்குத் தெரியும். அதனாலேயே அவர்கள் என்னை சீண்டுவதோடு, சண்டைக்கும் இழுக்கிறார்கள். ஆனால் நான் இப்போது அவுட்டாகாமல் இருப்பதற்கு அதுதான் காரணம். கடுமையான சவாலை நான் மிகவும் விரும்புகிறேன்.

நான் இப்போது 21 வயதில் இல்லை என்பது மக்களுக்கு தெரியும். கோபத்தை எங்கு கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரியாமல் இருப்பதற்கு நான் முதிர்ச்சியடையாதவன் இல்லை. எனது கோபத்தை கட்டுப்படுத்தாமல் போயிருந்தால் நான் இப்போது இங்கு இருந்திருக்க முடியாது. எனது கிரிக்கெட் வாழ்க்கை தொடங்குவதற்கு முன்னதாகவே முடிவுக்கு வந்திருக்கும் என்றார்.

SCROLL FOR NEXT