தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் 27-வது சதத்தைப் பூர்த்தி செய்து, தனது அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவினார். ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 494 ரன்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 88 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கிளார்க் 92, ஸ்டீவ் ஸ்மித் 50 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
2-வது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடியது ஆஸ்திரேலியா. நிதானமாக ஆடிய கிளார்க் 99 ரன்களை எட்டியபிறகு சதமடிக்க மேலும் 25 பந்துகளை எடுத்துக் கொண்டார். அவர் 99 ரன்களில் இருந்தபோது அடித்த பந்துகளையெல்லாம் தென் ஆப்பிரிக்க வீரர்கள் தடுத்தனர். பெரும் போராட்டத்துக்குப் பிறகு பிலாண்டர் வீசிய 100-வது ஓவரில் பவுண்டரி அடித்து சதம் கண்டார் கிளார்க். 215 பந்துகளில் மூன்றிலக்க ரன்களை எட்டிய கிளார்க்கிற்கு இது 27-வது சதமாகும்.
மறுமுனையில் ஸ்மித்தும் சிறப்பாக ஆட, 107.1 ஓவர்களில் 400 ரன்களை எட்டிய ஆஸ்திரேலியா, மேலும் ஒரு ரன் சேர்த்த நிலையில் ஸ்மித்தின் விக்கெட்டை இழந்தது. 155 பந்துகளைச் சந்தித்த அவர் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்தார். இதையடுத்து வாட்சன் களம்புகுந்தார். இந்தத் தொடரில் முதல்முறையாக களமிறங்கிய அவர் 32 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிராட் ஹேடின் 13 ரன்களிலும், ஜான்சன் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தபோதும், கேப்டன் கிளார்க் 150 ரன்களை எட்டினார். ஆஸ்திரேலியா 127.4 ஓவர்களில் 494 ரன்கள் குவித்திருந்தபோது மழை குறுக்கிட்டதைத் தொடர்ந்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது கிளார்க் 301 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 161, ரியான் ஹாரிஸ் 4 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.