விளையாட்டு

நாங்கள் நாட்டு மக்களுக்கு ஏமாற்றமளித்து விட்டோம்: ஹாக்கி கேப்டன் ஸ்ரீஜேஷ் வருத்தம்

பிடிஐ

ரியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டி காலிறுதியில் 1-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்து பதக்க வாய்ப்பை இழந்ததற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் இந்திய கேப்டன் ஸ்ரீஜேஷ்.

“நிலவைத் தொட்டுவிட்டோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அங்கு சென்றடைய முடியவில்லை. அங்கிருந்து வீழ்ந்து விட்டோம். இது மிகப்பெரிய அடி. ஏனெனில் நாட்டில் எங்களை பெரிதும் எதிர்பார்த்தனர்.

நாட்டு மக்களுக்கு ஏமாற்றமளித்து விட்டோம். வீரர்கள் இனி கடுமையாக உழைத்து அடுத்து வரும் தொடர்களில் நன்றாக ஆட பயிற்சி பெற வேண்டும்” என்றார்.

இந்தியா வீழ்த்திய பெல்ஜியம் 1920 ஆண்ட்வெர்ப் ஒலிம்பிக்கிற்குப் பிறகு தற்போது முதல் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. முதல் அரைமணி நேர ஆட்டத்தில் பெல்ஜியத்தின் பெனால்டி கார்னர் ஷாட்டை ஸ்ரீஜேஷ் மீண்டும் அற்புதமாகத் தடுத்து முன்னிலையை தக்கவைத்தார்.

“ஒரு கோல்கீப்பராக எனக்கு கடினமாக இருக்கிறது. எவ்வளவு கோல்களைத் தடுத்துக் காப்பாற்றினாலும் அது பயனில்லாமல் போகிறது ஏனெனில் கோல்கள் அடிப்பதுதான் முக்கியம்.

எனினும் இந்த கேப்டன்சி வாய்ப்பை எனது கனவாகவே கருதுகிறேன், இருந்தும் எனக்கு இது மிகச்சிறந்த கவுரவுமும் பொறுப்புமாகும். ஹாக்கியில் கேப்டன்சி என்பது முக்கியமானது அல்ல, களத்திற்கு வெளியே வீரர்களை ஒருங்கிணைப்பது பற்றியதாகும் கேப்டன்சி என்பது. ஒவ்வொருவரின் திறமையையும் வெளியே கொண்டு வருவது பற்றியதாகும் கேப்டன்சி என்பது” என்றார்.

பயிற்சியாளர் ஆல்ட்மன்ஸ் தனது ஏமாற்றத்தை தெரிவிக்கும் போது, “எனக்கு கடும் ஏமாற்றமளிக்கிறது, தோல்வியினால் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக வீரர்கள் ஆடியது எனக்கு ஏமாற்றமளிக்கிறது. ஆனால் பெல்ஜியத்திற்கு பாராட்டுக்கள், அந்த அணிதான் இந்திய அணியை இவ்வாறு ஆட வைத்துள்ளது. திட்டமிட்டபடி ஏன் இவர்களால் ஆடமுடியவில்லை என்பதற்கான காரணங்களில் தனிப்பட்ட வீரர்களின் ஆட்டத்திறனை நான் பரிசோதிக்க விரும்புகிறேன்.

ஹாக்கியின் உச்சத்திற்கு நெருங்கிக் கொண்டே வருகிறோம், ஆனால் அடுத்த கட்டத்திற்குச் செல்வது இன்னமும் கைகூடவில்லை. இதுதான் பெல்ஜியத்திற்கு எதிரான ஆட்டமும் எனக்கு காண்பிக்கிறது.” இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT