மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களில் புவனேஸ்வர் குமாரைத் தவிர மற்ற அனைவரும் ரன்களை வாரி வழங்கியபோதும் கேப்டன் தோனியோ, அவர்கள் அனைவரும் நன்றாகவே பந்துவீசினார்கள் என தெரிவித்துள்ளார்.
கொச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம் படுதோல்வி கண்டது இந்தியா. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. ஆனால் பின்னர் ஆடிய இந்திய அணி 41 ஓவர்களில் 197 ரன்களுக்கு சுருண்டது.
போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் தோனி, பந்துவீச்சாளர்கள் மீது குற்றம்சாட்ட மறுத்துவிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: கொச்சி ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏதுவாக இருக்கும் என்று நாங்கள் மதிப்பிட்டோம்.
பெரிய அளவில் பந்து சுழலவில்லை. புவனேஸ்வர் குமார் நீங்கலாக மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை கொடுத்துவிட்டனர். ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் சேர்த்த 321 ரன்களோடு ஒப்பிடுகையில், இந்திய பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்துவீசியதாகவே நினைக் கிறேன் என்றார்.