விளையாட்டு

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை எதிர்க்கும் மனு

செய்திப்பிரிவு

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக உத்தரவிடுவதை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை தள்ளிவைத்துள்ளது.

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரி அமிதாப் தாகுர், சமூக ஆர்வலர் நுதன் தாகுர் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தனர். அதில், நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை, தீவிர ஆய்வுக்கு பின்னர் தகுதிவாய்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும்.

கிரிக்கெட் விளையாட்டு தேசத்தை பின்னோக்கி கொண்டு செல்லக் கூடியது. அந்த விளையாட்டு ஒரு நாடகம் போல நடைபெற்று வருகிறது. சச்சினுக்கு பாரத ரத்னா விருதை வழங்கினால், அது செயல்படாமல் இருப்பதையும், விழிப்புணர்வின்றி இருப்பதையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துவிடும்.

விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்பை அளித்துள்ள விஸ்வநாதன் ஆனந்த், மில்கா சிங், கீத் சேத்தி ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

இப்போதுள்ள நடைமுறையின்படி பாரத ரத்னா விருதுக்கு பிரதமர் மட்டுமே பெயர்களை பரிந்துரைக்கும் நிலை உள்ளது. இந்த முறையால் வெளிப்படையற்ற தன்மையும், அனைவரையும் உள்ளடக்கிய (கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடிய) நிலைமையும் இல்லை.

பாரத ரத்னா விருதை பரிந்துரைக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும். வரலாற்று நாயகர்கள் அசோகர், அக்பர், காளிதாஸ், கபீர், கம்பன் போன்றோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதிகள் இம்தியாஸ் முர்தாஸா, டி.கே.உபாத்யாயா ஆகியோர் அடங்கிய அமர்வு, அது தொடர்பான தங்களின் முடிவை தெரிவிப்பதை தள்ளிவைப்பதாக கூறியுள்ளது.

SCROLL FOR NEXT