துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வரும் 22 முதல் 27 வரை நடைபெறவுள்ள மகளிர் டென்னிஸ் சங்க (டபிள்யூ.டி.ஏ.) சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து உலகின் 3-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் மரியா ஷரபோவா, தோள்பட்டை காயம் காரணமாக விலகியுள்ளார்.
விம்பிள்டன் போட்டியில் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட ஷரபோவா, அமெரிக்க ஓபன் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இந்த நிலையில் சீசனின் கடைசிப் போட்டியான டபிள்யூ.டி.ஏ. சாம்பியன்ஷிப்பில் இருந்தும் விலகியுள்ளார்.
தனது விலகலை உறுதி செய்துள்ள ஷரபோவா, “ இந்தப் போட்டியில் ஆடும் வாய்ப்பை இழந்ததால் இஸ்தான்புல் போட்டியின்போது ரசிகர்கள் கொண்டு வரும் ஆற்றல், வெறி, வரவேற்பு, மகிழ்ச்சி என எல்லா விஷயங்களையும் இழக்கிறேன். எனினும் எதிர்காலத்தில் இஸ்தான்புல்லில் விளையாட முடியும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சீசனின் கடைசிப் போட்டியான இந்தப் போட்டிக்கு அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், பெலாரஸின் விக்டோரியா அசெரன்கா, போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா, சீனாவின் லீ நா, செக்.குடிரசின் பெட்ரா விட்டோவா, இத்தாலியின் சாரா எர்ரானி, செர்பியாவின் ஜெலீனா ஜான்கோவிச் ஆகியோர் விளையாடத் தகுதி பெற்றுவிட்டனர்.