ஒருநாள் மற்றும் டி20 போன்ற குறைந்த ஓவர் போட்டிகளில் தான் திருப்திகரமாக வீசவில்லை என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ.டிவி-யில் இசாந்த் சர்மா கூறியதாவது:
“நமக்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். நாம் நேர்மையாக இருந்தால் சில விஷயங்களை ஏற்றுக் கொள்வது சுலபம். குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் நான் சரியாக வீசவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்லபடியாக வீசி வருகிறேன், எனவே எனது பலம் எது என்பதை நான் அறிந்துள்ளேன்.
அனைத்து வடிவங்களிலும் ஆடும் போது நாம் எங்கு தவறு செய்கிறோம் என்பதை கவனிக்கத் தவறி விடுவோம். குறுகிய காலத்தில் தவறுகள அறிந்து கொள்வது கடினம். டி20 கிரிக்கெட்டில் நான் சிறப்பாகச் செயல்படவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஒவ்வொருவரிடமும் வேறு சில பலங்கள் இருக்கும். இதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது, ஆகவே உண்மையை ஒப்புக் கொள்வதில் தீங்கில்லை என்றே நான் நினைக்கிறேன்.
பந்துவீசுவதற்கு ஏற்ற நிலைமைகள் இல்லாவிடினும் கடினமாக உழைப்பது அவசியம். எனவே நாம் விட்டுக் கொடுப்பு மன நிலையில் பிட்சில் நமக்கு ஒன்றுமில்லை ஸ்பின்னர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று சிந்திப்பது சுலபம். ஆனால் எந்த பிட்சிலும் நம் மீது நாம் நம்பிக்கை வைத்து முழு மூச்சுடன் வீச வேண்டும். 2-வது 3-வது ஸ்பெல் வீசும் போது கூட நான் முழுத்திறமையுடன் வீசவே விரும்புவேன். 100% கொடுக்க வேண்டும். இதுதான் என்னை வித்தியாசமான பவுலராக உருவாக்கியுள்ளது.
மே.இ.தீவுகளில் முற்றிலும் வேறொரு கால நேரத்தில் விளையாடுகிறோம் எனவே நம் உடற்தகுதியை நாம் பேணிகாப்பது அவசியம்.” என்றார்.
2011 மே.இ.தீவுகள் பயணத்தின் போது 3 டெஸ்ட் போட்டிகளில் இசாந்த் சர்மா 22 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.