இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் இன்று தொடங்குகிறது.
இப்போட்டி குறித்து நேற்று நிருபர்களிடம் கூறிய பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், “ஓல்ட் டிராபோர்ட் நகரில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் போர் வீரர்களாக செயல் பட்ட நாம், ஓல்ட் டிராபோர்டில் அதற்கு நேர் எதிராக செயல்பட்டு தோல்வி அடைந்துவிட்டோம் என்று பாகிஸ்தான் வீரர்களிடம் கூறியுள்ளேன். பிர்மிங்காம் போட்டியில் மீண்டும் சிறப்பாக ஆடி, தொடரில் முன்னிலை பெறவேண்டும் என்றும் கூறியுள்ளேன்” என்றார்.
பாகிஸ்தானை பொறுத்தவரை அதன் முதல் 3 பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாதது மிகப்பெரிய குறையாக உள்ளது. அதை சரிசெய்ய சமி அஸ்லாம் அணியில் சேர்க்கப்படலாம் என்றும், அசார் அலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் சதம் அடித்த கேப்டன் அலஸ்டார் குக், ஜோ ரூட் ஆகியோரின் பேட்டிங்கையே அந்த அணி பெரிதும் நம்பியுள்ளது. பந்துவீச்சைப் பொறுத்தவரை அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இப்போட்டியில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஸ்டீவ் ஃபின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளாதாக இங்கிலாந்து கேப்டன் அலஸ்டார் குக் தெரிவித்துள்ளார். இப்போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷீத் ஆட வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.