இந்தியா - நியூஸிலாந்து இடையே வெல்லிங்டன் நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டத்தில், இந்தியா 438 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை முடித்தது. இதன் மூலம், நியூஸிலாந்தை விட, 246 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அபாரமாக ஆடிய இந்திய வீரர் அஜிங்க்ய ரஹானே, டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தனது 2-வது இன்னிங்ஸை தொடர்ந்த நியூஸி. 1 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணிக்கு, நைட் வாட்ச்மேனாக ஆடிய இஷாந்த் சர்மா சிறிது நம்பிக்கை அளித்தார். 3 பவுண்டரிகளையும் அடித்த அவரது ஆட்டம் வெகு நேரம் நீடிக்கவில்லை. 26 ரன்களுக்கு போல்ட்டின் பந்தில் ஆட்டமிழந்தார்.
சதத்தை தவறவிட்ட தவாண்
வெகு சிறப்பாக ஆடி வந்த ஷிகர் தவாண் இன்று கண்டிப்பாக சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. சவுத்தியின் ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து 98 ரன்களை எட்டிய தவாண், துரதிர்ஷ்டவசமாக, அடுத்த பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 127 பந்துகளை சந்தித்த அவர், 14 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 98 ரன்கள் அடித்திருந்தார்.
தொடர்ந்து வந்த ரோஹித் சர்மா இம்முறையும் ஏமாற்றமளித்தார். ரன் ஏதும் எடுக்காமல் நீஷம் பந்தில் வெளியேறினார். பின்னர் ரஹானேவுடன் இணைந்த கோலி, அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். உணவு இடைவேளை வரை இந்த ஜோடி நிலைத்து ஆடியது. இந்தியா நியூஸிலாந்தின் ஸ்கோரான 192-ஐ தாண்டி முன்னிலை பெற்றது.
கை கொடுத்த தோனி, ரஹானே
இந்த ஜோடியும் வெகு நேரம் நீடிக்கவில்லை. வாக்னரின் பந்தில் கோலி 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் தோனியுடன் சேர்ந்த ரஹானே, ஆட்டத்தின் போக்கை இந்தியா வசம் கொண்டு வந்தார். பொறுப்பாக ஆடிய இருவரும், ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். நியூஸிலாந்தின் எந்த பந்துவீச்சாளரும் அந்த அணிக்கு கைகொடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் இந்த இருவரும் ஒருநாள் போட்டியை போல, சராசரியாக ஒரு ஓவருக்கு 6 ரன்கள் வீதம் அடித்து வந்தனர்.
ரஹானே 93 பந்துகளிலும், தோனி 64 பந்துகளிலும் தங்களது அரை சதங்களைத் தொட்டனர். இந்தத் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களை சோதித்த பவுன்சரே தோனியின் விக்கெட் விழவும் காரணமாக இருந்தது. 86 பந்துகளில் 9 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடித்திருந்த தோனி 68 ரன்களுக்கு போல்ட்டின் பந்தில் வெளியேறினார். 7-வது விக்கெட்டிற்கு இணைந்த தோனியும் ராஹானேவும், 24.1 ஓவர்கள் நிலைத்து 124 ரன்கள் சேர்த்திருந்தனர்.
பின்னர் களமிறங்கிய ரவீந்த்ர ஜடேஜா, அதிரடியாக விளையாடி ரன் சேர்க்க ஆரம்பித்தார். 16 பந்துகளில் 26 ரன்கள் குவித்த அவர், வாக்னரின் பந்தில் வெளியேறினார். இதனால் ரஹானேவின் சதம் அடிக்கும் வாய்ப்பு கை நழுவிப் போகும் நிலை உருவானது. ஆனால் ஜாகீர் கான் அவசரப்பட்டு தனது விக்கெட்டை இழக்காமல், ரஹானேவிற்கு ஈடு கொடுத்தார். ரஹானே 99 ரன்கள் எடுத்திருந்த போது, ஆண்டர்சன் வீசிய ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது முதல் சத்தைக் கடந்தார். 149 பந்துகளை சந்தித்த அவர் 15 பவுண்டரிகளும் அடித்தார். அதே ஓவரில் மேலும் இரண்டு பவுண்டரிகளை விளாசினார் ரஹானே.
அடுத்த சில ஓவர்களிலேயே 118 ரன்களுக்கு (158 பந்துகள், 17 பவுண்டரி, 1 சிக்ஸர்) சவுத்தியின் பந்துவீச்சில் ரஹானே ஆட்டமிழந்தார். அவருக்கு தோதாக இருந்த ஜாகீர் கானும் 22 ரன்களுக்கு, அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். முடிவில் இந்தியா 438 ரன்கள் எடுத்து, நியூஸிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 246 ரன்கள் முன்னிலை பெற்றது.
நியூஸிலாந்து 24/1
அடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய நியூஸி. அணிக்கு இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜாகீர் கான் வீசிய பந்தில் ஃபுல்டன் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இன்றைய ஆட்டத்தில் சொற்ப ஓவர்களே மீதமிருந்த நிலையில், மேற்கொண்டு விக்கெட் இழக்கக் கூடாது என்பதிலேயே அந்த அணியின் கவனம் இருந்தது. ஆட்ட நேர முடிவில், அந்த அணி 24 ரன்கள் எடுத்து 1 விக்கெட் இழந்திருந்தது. இந்தியாவை விட 222 ரன்கள் பின்தங்கியுள்ளது.
பவுலிங்கிற்கு சாதகமாக இருந்த ஆடுகளம், இப்போது பேட்டிங்கிற்கு சிறிது சாதகமாக மாறியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்தியாவின் 246 ரன்கள் முன்னிலையை நியூஸி. அணி கடந்து போவது அவ்வளவு சிரமமாக இருக்காது. அதே நேரத்தில், முதல் இன்னிங்ஸை போன்ற பந்துவீச்சை இந்தியா வெளிப்படுத்தும் பட்சத்தில், இந்த டெஸ்ட் போட்டியை வெல்ல இந்திய அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உருவாகும் எனத் தெரிகிறது. நாளைய ஆட்டமே இந்த போடியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். வெற்றியின்றி இந்தத் தொடரை ஆடி வரும் இந்தியாவுக்கு இந்த போட்டியாவது சாதகமாக அமையுமா என்பது அடுத்த இரண்டு நாட்களில் தெரிவரும்.