விளையாட்டு

பெல்ப்ஸுக்கு 22-வது தங்கம்

செய்திப்பிரிவு

ரியோ ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் 4-வது தங்கப் பதக்கத்தை வென்றார். இது ஒலிம்பிக்கில் இவர் பெறும் 22-வது தங்கப் பதக்கமாகும்.

அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ், ஒலிம்பிக் போட்டிகளில் அதிக அளவில் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகிறார். இந்நிலையில் நேற்று நடந்த 200 மீட்டர் மெட்லே நீச்சல் போட்டியில் அவர் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இது ரியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் பெற்றுள்ள 4-வது தங்கப் பதக்கமாகும். இந்த தங்கப் பதக்கத்தையும் சேர்த்து ஒலிம்பிக் போட்டிகளில் அவர் மொத்தம் 22 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

-------------

இந்திய வீரர்கள் இன்று

பெண்கள் ஹாக்கி

இந்தியா - அர்ஜென்டினா

நேரம்: மாலை 6.30

பாட்மிண்டன்

பெண்கள் இரட்டையர் பிரிவு

ஜுவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா (இந்தியா) - சுபாஜிராகுல், டேராட்டனாசாய் (தாய்லாந்து)

நேரம்: இரவு 7.15

பாட்மிண்டன்

ஆடவர் இரட்டையர் போட்டி

மனு அட்ரி, சுமித் ரெட்டி (இந்தியா) - ஹயாகாவா, எண்டோ (ஜப்பான்)

நேரம்: ஞாயிறு அதிகாலை 4.30

-------------

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய வீராங்கனை

பல்கேரியாவின் ஸ்டீபிள் சேஸ் வீராங்கனையான சில்வியா டானெகோவா, நேற்று முன்தினம் ரியோ நகரில் நடந்த ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். அவரிடம் இருந்து 4 முறை ரத்தம் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. இதில் ஒரு ரத்த மாதிரியில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

ஊக்கமருந்து சோதனையில் தான் சிக்கியது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள சில்வியா டானெகோவா, “நான் எந்த தவறும் செய்யவில்லை. சோதனை முடிவுகள் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

-------------

ரியோ நகரில் நர்சிங் யாதவ்

ஊக்கமருந்து சோதனையில் சிக்கி, பின்னர் விடுவிக்கப்பட்ட இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ், நேற்று முன்தினம் இரவு ரியோ டி ஜெனிரோ நகருக்கு வந்து சேர்ந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

ஒலிம்பிக் நகரத்துக்கு வந்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. ஊக்கமருந்து விவகாரத்தில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களை நான் மறந்துவிட்டேன். இனியும் அதுபற்றி என்னிடம் கேட்காதீர்கள். இப்போதைக்கு நான் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதையே முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளேன். 19-ம் தேதி நடக்கவுள்ள எனது மல்யுத்த போட்டிக்கு பிறகு நான் உங்களிடம் பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT