விளையாட்டு

கோபா அமெரிக்கா கால்பந்து: மெக்சிகோ - வெனிசுலா ஆட்டம் டிரா- உருகுவேக்கு ஆறுதல் வெற்றி

செய்திப்பிரிவு

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் வெனிசுலா அணிக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது மெக்சிகோ அணி.

சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்த இரு அணிகளும் ஏற்கெனவே காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் நேற்று தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ஹூஸ்டன் நகரில் மோதின.

ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து மெக்சிகோவுக்கு அதிர்ச்சி கொடுத்தது வெனிசுலா. அல்ஜான்ட்ரோ குயரா அடித்த ப்ரீகிக்கை கிறிஸ்டியன் சான்டோஸ் தலையால் முட்ட அதனை மானுவல் வெலாஸ்குவெஸ் கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் வெனிசுலா 1-0 முன்னிலை வகித்தது.

மெக்சிகோ வீரர் ஜீசஸ் மானுவல் கோல் அடிக்க கிடைத்த பல்வேறு வாய்ப்புகளை கோட்டைவிட்டார். எனினும் 80-வது நிமிடத்தில் 5 வீரர்களின் தடுப்புகளை மீறி 10 யார்டு தூரத்தில் இருந்து ஜீசஸ் மானுவல் கோல் அடித்து அசத்தினார். 84-வது நிமிடத்தில் வெனிசுலா அணிக்கு 2-வது கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த அணியின் ஜோசப் மார்ட்டின்ஸ் இலக்கை நோக்கி உதைத்த பந்தை மெக்சிகோ கோல் கீப்பர் ஜோஸ்டி ஜீசஸ் கொரோனா தடுத்தார். அதன் பின்னர் இரு அணிகள் தரப்பிலும் கோல் அடிக்கப்படவில்லை. முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்த ஆட் டத்தை டிராவில் முடித்ததன் மூலம் 22 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல் வியை சந்திக்காத பெருமையை தக்க வைத்துக்கொண்டுள்ளது மெக்சிகோ.

லீக் ஆட்டங்களின் முடிவில் மெக்சிகோ அணி 7 புள்ளிகளுடன் சி பிரிவில் முதலிடம் பிடித்தது. அந்த அணி காலிறுதியில் டி பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியனான சிலியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. சி பிரிவில் இரண்டாவது இடம் பிடித்துள்ள வெனிசுலா காலிறுதியில், இந்த முறை பட்டம் வெல்லக்கூடிய அணியாக கருதப்படும் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆறுதல் வெற்றி

சி பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருந்த உருகுவே-ஜமைக்கா அணிகள் மோதின. இதில் உருகுவே 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 15 முறை சாம்பியன் பட்டம் வென்ற உருகுவே அணிக்கு இந்த வெற்றி ஆறுதலாக அமைந்தது.

இன்றைய ஆட்டங்கள்

சிலி- பனாமா

நேரம்: அதிகாலை 5.30

அர்ஜென்டினா- பொலிவியா

நேரம்: காலை 7.30

ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

SCROLL FOR NEXT