2022 வரை ஐபிஎல் போட்டிகளுக்கான தலைமை ஸ்பான்சர்ஷிப்பை சீன மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ தக்கவைத்துள்ளது. மொத்த ஒப்பந்தத் தொகை ரூ.2199 கோடி, முந்தைய ஒப்பந்தத்தை விட இது 554% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
விவோ முதன் முதலாக ஐபிஎல் தலைமை ஸ்பான்சர்ஷிப்பை பெற்றது 2015-ம் ஆண்டு.
இது குறித்து பிசிசிஐ செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“ஸ்மார்ட் போன் நிறுவனத்தின் ஒப்பந்தத் தொகை ரூ.2,199 கோடி. இது முந்தைய ஒப்பந்தத் தொகையை விட 554% அதிகம். வரும் 5 ஐபிஎல் போட்டித் தொடர்களில் (2018-22) விவோ தலைமை ஸ்பான்சராக செயல்படுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.440 கோடி கணக்கு வருகிறது. விவோ 2016 மற்றும் 2017க்கான ஸ்பான்சர்ஷிப் உரிமைகளை பெற்றிருந்தது. இதில் ஆண்டொன்றுக்கு ரூ.100 கோடி என்ற அளவிலான ஒப்பந்தமாகும்.
இன்னொரு மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ ஐபிஎல் தலைமை ஸ்பான்சர் உரிமைகளுக்காக குறிப்பிட்ட தொகை ரூ.1,430 கோடி ஆனால் விவோவின் ஒப்பந்தத் தொகை இதைவிடவும் அதிகம் என்பதால் ஓப்போ இழந்தது.