டிவைன் பிராவோவின் கடைசி பந்து ஸ்லோ பந்தாக இருக்கும் என்று தனது கணிப்பு சரியே என்றும் ஆனால் ஷாட்டை செயல்படுத்திய விதம் தவறானது என்றும் இந்திய கேப்டன் தோனி தெரிவித்தார்.
மிகப்பெரிய டி20 போட்டி என்ற சாதனை போட்டியில் இந்தியாவின் ஆட்டத்தை பாராட்டுவதே தகும் என்கிறார் தோனி.
“245 ரன்களை விரட்டிய விதம் அருமையானது, பாராட்டுக்குரியது, எப்போதும் வெற்றிப்பாதையிலேயே இலக்கை அணுகினோம், கடைசி பந்தில் கூட எனது கணிப்பு சரியாக அமைந்தது, ஆனால் ஷாட்டை செயல் படுத்தியவிதம் சரியாக அமையவில்லை.
இப்போதைய கிரிக்கெட்டில் கடைசி ஓவர்கள், குறிப்பாக கடைசி ஓவரில் பந்து வீசுவதில் பிராவோ தலைசிறந்தவர் என்றே கருதுகிறேன். அவரது அனுபவம் அவரது பந்து வீச்சை நமக்குக் கடினமாக்குகிறது. எனவே நாம் எவ்வாறு ஷாட்டை கையாள்கிறோம் என்பதுதான் முக்கியமாகி விடுகிறது.
அவர் என்ன வீசுவார் என்பதை ஊகிக்க வேண்டியுள்ளது, அதன் படி ஷாட்களை திட்டமிட வேண்டியுள்ளது. எனவே யூகமும் ஷாட்டும் சரிவர அமைந்து விட்டால் வெற்றி நம் பக்கம். யார் வீசுகிறார் என்பதை விட அவரது பலம் என்னவென்பதை யோசிக்க வேண்டும். அவர் அடுத்த பந்தை எங்கு பிட்ச் செய்வார் என்று கணிக்க வேண்டும்.
மே.இ.தீவுகள் 270 ரன்களுக்கும் மேல் செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்தனர், ஆனால் அஸ்வின் 12-வது ஓவரில் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தது உத்வேகத்தை ஏற்படுத்தியது. முதல் 6 ஓவர்களில் இன்னும் கொஞ்சம் பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை. தொடக்கத்தில்தான் அதிக ரன்களை விட்டுக் கொடுக்கிறோம். கடைசி 8 ஒவர்கள் வீசியது திருப்திகரமகா இருந்தது.
பவுலர்கள் சூழ்நிலை எப்படி என்பதை சடுதியில் கணித்து ஆட்டத்தின் திட்டங்களை மாற்ற வேண்டும். சாதாரணமாக 4 ஒவர்களில் 40 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் நல்லது என்று நினைப்போம், இப்படியாக பிட்சிற்கு ஏற்றவாறு எது நல்ல பவுலிங் என்பதை உடனடியாக சிந்தித்து செயல்படுவது அவசியம். இந்தப் பிட்ச் 4 ஓவர் 50 ரன் பிட்ச் என்றால் 2 விக்கெட்டுகள் என்பது ஒரு பிளஸ்.
கே.எல்.ராகுலின் பலம் அவர் கிரிக்கெட் ஷாட்களுடன் டி20 அதிரடி ஷாட்களையும் நன்றாகக் கலப்பதே. மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் அடிக்கிறார், கவருக்கு மேல், மிட் ஆஃபுக்கு மேல், மிட் ஆன், எனவே அவர் ஒரு பூரண கிரிக்கெட்டர். கடைசி 6 மாதகாலமாக அவரது பேட்டிங் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது ஆரோக்கியமான அறிகுறி.
அருமையான மைதானம், வசதிகள் நன்றாக இருந்தது 500 ரன்கள் 40 ஓவர்களில் என்பது மோசமான பிட்சாக இருக்க முடியாது.
எங்கு சென்றாலும் இந்திய ரசிகர்கள் எங்களை பின் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது. முதல் முறையாக யு.எஸ்.-இல் ஆடுகிறோம் ஆனால் இங்கு இந்தியர்கள் அணியை ஆதரிக்க திரள்வது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் தோனி.