விளையாட்டு

முந்தைய கேப்டன்களிடமிருந்து எனக்கு தகுந்த ஆதரவு கிட்டவில்லை: மனம் திறக்கும் ஜெய்தேவ் உனட்கட்

அமோல் கர்ஹாட்கர்

ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் தனது சிறப்பான பந்து வீச்சுக்கு தோனி மற்றும் ஸ்மித் ஆகியோரது பங்களிப்பை நன்றியுடன் விதந்தோதினார்.

புனே அணியில் இந்த முறை கண்டுபிடிக்கப்பட்ட, அல்லது தன்னைக் கண்டுபிடித்துக் கொண்ட வீரர் என்றால் அது பேட்டிங்கில் ராகுல் திரிபாதி, பந்து வீச்சில் ஜெய்தேவ் உனட்கட்.

மகாத்மா காந்தி பிறந்த போர்பந்தரைச் சேர்ந்த உனட் 11 போட்டிகளிலேயே 20 விக்கெட்டுகளை இம்முறை கைப்பற்றியுள்ளார்.

இவரை சிறந்த பவுலராக உருமாற்றியது எது?

த இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு உனட்கட் கூறும்போது, “கடந்த 2 ஆண்டுகளாக முந்தைய கேப்டன்களிடமிருந்து எனக்குத் தேவைப்பட்ட முறையான ஆதரவு கிட்டவில்லை. இத்தனைக்கும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் நான் சிறப்பாகவே செயலாற்றினேன்.

கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த சீசனில் நன்றாக விளையாட வேண்டும் என்ற அவா என்னுள் எழுந்ததே காரணம். என்னிடம் எப்போதும் திறமை இருப்பதாகவே கருதுகிறேன். அதை முறையாக பயன்படுத்திக் கொள்வதுதான் விஷயம். இந்த சீசனில் முதல் போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது அதில் நன்றாக ஆடிய பிறகே நான் அதனை அடித்தளமாக வைத்துக் கொண்டு முன்னேறினேன்” என்றார்.

2015-ல் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக ஒரு போட்டியில் 3 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்ததற்காக பிறகு வாய்ப்பளிக்கப்படவில்லை. 2016 ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் ஆடிய உனட்கட் 49 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இந்த ஆண்டு தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், கேப்டன் ஸ்மித், தோனி ஆகியோர் தனக்கு பேருதவி புரிந்ததாக உனட்கட் தெரிவித்தார்.

“ரோஹித்திற்கு கடைசி ஓவரை வீசிய போது அவருக்கு வேகம் குறைந்த பந்துகளை வீச திட்டமிட்டோம், அவர் என் பந்தை சிக்ஸர் அடித்தார். அப்போதுதான் ஸ்மித் என்னிடம் வந்து இதே வேகம் குறைந்த பந்தை வீசு நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இதுதான் ஒரு பவுலருக்கு உத்வேகம் அளிப்பதாகும்.

அதே போல் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை நான் வீழ்த்திய ஆட்டத்தில் தோனி அளித்த உத்வேகமும் மறக்க முடியாதது. அவர் என்னிடம் வந்து எதிரணி வீரர்களின் அழுத்தம் எந்த நிலையிலும் போய் விடக்கூடாது. இத்தகைய பேட்ஸ்மென்களுக்கு எதிராக உன்னால் நன்றாக வீச முடியும் என்றார், இது என்னுடைய திட்டங்களை களத்தில் வெற்றிகரமாக செயல்படுத்த உதவியது.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நான் எடுத்த ஹேட்ரிக் என்னுடைய வாழ்நாளில் முக்கியமான தருணமாகும். அதை அடித்தளமாக வைத்து இம்முறை புனே அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல பங்களிப்பு செய்வேன்” என்றார் உனட்கட்.

SCROLL FOR NEXT