ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் சர்வதேச தரவரிசையில் 43-வது இடத்தில் உள்ளவரான கனடாவின் வஸீக் போஸ்பிஸில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட்டை வீழ்த்தினார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்றிருந்த முன்னணி வீரர்களில் முதலில் தோல்வி கண்டவர் காஸ்கட்தான். இதனால் லண்டனில் நடைபெறவுள்ள உலக டூர் பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் ரிச்சர்ட் காஸ்கட் விளையாடும் வாய்ப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. உலக டூர் பைனல்ஸ் போட்டியில் விளையாடுவதற்கு தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் இருக்க வேண்டும். ஆனால் சர்வதேச தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள ரிச்சர்ட்ஸ் காஸ்கட், ஷாங்காய் மாஸ்டர்ஸ் போட்டியில் முதல் சுற்றோடு வெளியேறியிருப்பதால், தரவரிசையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே. இதனால் உலக டூர் பைனல்ஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை காஸ்கட் ஏறக்குறைய இழந்துள்ளார்.
ஹெவிட் தோல்வி
ஆஸ்திரேலியாவின் லெய்டன் ஹெவிட் 4-6, 2-6 என்ற நேர் செட்களில் இத்தாலியின் ஆன்ட்ரியாஸ் செப்பியிடம் தோல்வி கண்டார். செப்பி, அடுத்த சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை சந்திக்கவுள்ளார்..
தோல்வி குறித்துப் பேசிய லெய்டன் ஹெவிட், “செப்பி சிறப்பாக ஆடினார். முதல் 3 கேம்களுக்குப் பிறகு அவர் ஆக்ரோஷமாக ஆடினார். முன்னெப்போதும் இல்லாத வகையில் அபாரமாக சர்வீஸ் அடித்தார்” என்றார்.