19 வயதுக்கு உட்பட்டோருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியை இளம் இந்திய அணி டையில் முடித்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இளம் இந்திய அணி 3-1 என வென்றது.
மும்பையில் நேற்று நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜார்ஜ் பார்ட்லெட் 47, போப் 45 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜம்வால் 3 விக்கெட்கள் கைப்பற்றினார்.
227 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 49.5-வது ஓவரில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 226 ரன்கள் சேர்த்தது. கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் இஷான் போரெல் அடித்த பந்தை மேக்ஸ் ஹோல்டன் கேட்ச் செய்ய ஆட்டம் டையில் முடிவடைந்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 65, அயுஸ் ஜம்வால் 40, யாஷ் தாக்குர் 30 ரன்கள் சேர்த்தனர். முன்னணி வீரர்களான பிரியம் கார்க் 0, அபிஷேக் சர்மா 4, மனோஜ் கர்லா 21, மயங்க் ராவத் 1 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
54 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் ராதாகிருஷ்ணன், ஹெட் படேல் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்தது. படேல் 23 ரன்களில் ஸ்டெம்பிங் ஆனார். அடுத்து வந்த சிவா சிங் 13 ரன்களில் வெளியேற இந்திய அணி 137 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது தத்தளித்தது.
மேற்கொண்டு அணியின் ஸ்கோர் உயராத நிலையில் ராதாகிருஷ்ணனும் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஹென்னி புரூக்ஸ் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். ஆட்டம் டையில் முடிவடைந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட தொடரை இளம் இந்திய அணி 3-1 என கைப் பற்றி கோப்பையை வென்றது.