இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான நல்லெண்ண தூதராக இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியமித்தது.
இதைத்தொடர்ந்து அவர் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள உள்ள மல்யுத்த அணியை சந்தித்து வாழ்த்தும் தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியை நேரில் காண வருமாறு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் சச்சினுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
உலகில் உள்ள முக்கியமான பிரமுகர்களுக்கான அழைப்பின் பேரில் சச்சினை, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாஹ் அழைத்துள்ளார். இந்த அழைப்பை சச்சின் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 2-ம் தேதி ரியோ புறப்படுகிறார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரியோ செல்லும் சச்சின், ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளை சந்தித்து வாழ்த்து கூறவும் உள்ளார். ஒலிம்பிக் போட்டியை சச்சின் நேரில் பார்வையிட செல்வது இதுவே முதன்முறையாகும்.
இதற்கிடையே சச்சின் சமீபத்தில் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பு போட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டி நடைபெறும் ரியோ டி ஜெனிரோ நகரில் தற்போது ஜிகா வைரஸ் தாக்குதல் அபாயம் இருப்பது குறிப்பிடத்தக்கது.