எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடரில் ஐஓசி அணி அரை இறுதிக்கு முன்னேறியது.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடி யத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நேற்று ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஐஓசி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை ஹாக்கி அசோஷியேசன் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் ஐஓசி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஐஓசி அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது.
ஒரு ஆட்டத்தை டிராவில் முடித்திருந்த ஐஓசி 10 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. இந்த பிரிவில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் கடைசி ஆட்டத்தில் பிபிசிஎல்-தமிழ்நாடு ஹாக்கி குழு அணிகள் மோதுகின்றன. பிபிசிஎல் அணி 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்றுள்ளது. தமிழக அணி 3 ஆட்டத்தில் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அதிக கோல்கள் வித்தியாசத்தில் ஜெயித்தால் மட்டுமே தமிழக அணியால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
பி பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ராணுவ லெவன் 3-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் வங்கியை வீழ்த்தியது. இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே 8-2 என்ற கோல் கணக்கில் ஹாக்கி கர்நாடகா அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியால் 9 புள்ளிகளுடன் இந்தியன் ரயில்வே அணி அரை இறுதிக்குள் நுழைந்தது. பி பிரிவில் இன்று மாலை 4.15 மணிக்கு நடைபெறும் கடைசி ஆட்டத்தில் ராணுலெவன்-ஓஎன்ஜிசி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
6 புள்ளிகளுடன் உள்ள ராணுவ லெவன் அணி இந்த ஆட்டத்தை டிரா செய்தாலே அரை இறுதிக்கு முன்னேறிவிடும். அதேவேளையில் 4 புள்ளிகளுடன் உள்ள ஓஎன்ஜிசி வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதி சுற்று வாய்ப்பை பெற முடியும்.