விளையாட்டு

முதல் டெஸ்ட்: நியூஸிலாந்திடம் இந்தியா போராடி தோல்வி

செய்திப்பிரிவு

இந்தியா நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த பரபரப்பான முதல் டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஆக்லாந்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸி. அணி 503 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வில்லியம்சன் சதமும், கேப்டன் மெக்கல்லம் இரட்டைச் சதமும் அடித்தனர். தொடர்ந்து ஆடிய இந்திய அணி 202 ரன்கள் மட்டுமே எடுத்து, 301 ரன்கள் பின்தங்கி தனது முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

ஆனால் ஃபாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்துக்கு, இந்திய பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சியளித்தனர். அதிரடியான பந்து வீச்சால் 105 ரன்களுக்கு அந்த அணியை ஆட்டமிழக்கச் செய்தனர். ஏற்கனவே 301 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தால், இந்தியாவுக்கு 407 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயமானது.

வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, நேற்றைய ஆட்டம் முடியும் வரை 1 விக்கெட் மட்டுமே இழந்து 87 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் 320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இன்று இந்தியா களமிறங்கியது.

இன்றைய ஆட்டம் ஆரம்பித்த முதல் ஓவரிலேயே, நேற்று 49 ரன்கள் எடுத்திருந்த தவான், தனது அரைச் சதத்தைப் பெற்றார். அடுத்த சில ஓவரிலேயே 23 ரன்களுக்கு புஜாரா ஆட்டமிழந்தார். பின்பு கோலி தவானுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நியூஸிலாந்தின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர். உணவு இடைவேளை வரை மேற்கொண்டு விக்கெட் இழப்பின்றி, இந்தியா இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 169 ரன்கள் குவித்திருந்தது. தவான் 81 ரன்களும், கோலி 55 ரன்களும் எடுத்திருந்தனர்.

தவான் சதம்

உணவு இடைவேளைக்குப் பின்னும் தங்களது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்த இருவரும், பவுண்டரிகள், சிக்ஸர்கள் என எளிதாக ரன்கள் எடுக்கத் தொடங்கினர். இவர்கள் இருவரும் களத்தில் இருந்தாலே இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்கிற சூழல் உருவானது. சோதி வீசிய ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து, 169 பந்துகளில் ஷிகர் தவான் தனது சதத்தைக் கடந்தார்.

வெற்றி தேடித் தந்த வாக்னர்

ஆட்டத்தில் திருப்புமுனையாக அடுத்த சில ஓவர்களில் வாக்னரின் பந்துவீச்சில் கோலி 67 ரன்களுக்கு ஆட்டமிழக்க ரோஹித் சர்மா களமிறங்கினார். இருவரும் ஆட்டத்தின் போக்கை தங்கள் பக்கம் கொண்டு வரும் வேளையில், மீண்டும் வாக்னர் பந்துவீச்சில் முக்கிய விக்கெட்டான ஷிகர் தவான் வீழ்ந்தார். அவர் 211 பந்துகளில் 115 ரன்களை அடித்திருந்தார்.

வெற்றி பெற 139 ரன்கள் தேவை என்கிற நிலையில் ரஹானே 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதற்கடுத்த ஓவரிலேயே ரோஹித் சர்மா 19 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் கேப்டன் தோனியுடன் கைகோர்த்த ரவீந்த்ர ஜடேஜா, ஒருநாள் போட்டியைப் போல அதிரடியாக ரன் சேர்க்க ஆரம்பித்தார். 21 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தாலும் தொடர்ந்து நிலைத்து ஆட அவரால் முடியாமல் போனது. போல்டின் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

களத்தில் இருக்கும் தோனியைத் தவிர வேறு பேட்ஸ்மேன்கள் இல்லை என்ற நிலையில், ஜாகீர் கான் ஆட வந்தார். அவரால் முடிந்த வரை தோனிக்கு ஈடு கொடுத்து ஆட ஆரம்பித்தார். அவ்வபோது பவுண்டரிக்களும் வந்தன. ஏற்கனவே 2009-ஆம் ஆண்டு நியூஸிலாந்தில், அந்த அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் ஜாகீர் கான் அரை சதம் எடுத்துள்ளார் என்பதால், இந்த போட்டியில் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வாக்னர் தனது 3-வது விக்கெட்டை வீழ்த்த, ஜாகீர் கான் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த இரண்டு ஓவர்களில் தோனியும் 39 ரன்களுக்கு வாக்னரின் பந்துவீச்சிலேயே ஆட்டமிழக்க, இந்தியாவின் வெற்றிவாய்ப்பு பொய்த்தது. அடுத்த ஓவரிலேயே இஷாந்த் சர்மாவும் போல்டின் பந்தில் வெளியேறினார். இதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வென்றது. ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் அடித்த நியூஸிலாந்து அணியின் கேப்டன் மெக்கல்லம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெற்றிவாய்ப்பு அருகில் இருந்தும், பேட்ஸ்மேன்களின் தவறான அணுகுமுறையால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்து இந்தியா இந்த போட்டியில் தோல்வி கண்டது. முக்கியமாக, முதல் இன்னிங்ஸில் இந்தியா எடுத்த ரன்களே, நியூஸி. அணி அதிக முன்னிலை பெறக் காரணமாக இருந்தது. 105 ரன்களுக்கு 2-ஆம் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தாலும், முதலில் 300 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் நியூஸி. அணியால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது.

கடைசி வரை போராடிய இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இந்த டெஸ்ட் போட்டி நல்ல பாடமாக அமைந்திருக்கும். அடுத்த டெஸ்ட் போட்டி பிப்ரவரி 14-ஆம் தேதி வெல்லிங்டன் நகரில் தொடங்கவுள்ளது.

SCROLL FOR NEXT