விஸ்டன் இதழ் 2013-ம் ஆண்டின் தலைசிறந்த 5 கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்துள்ளது. அதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவணும் இடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் கிறிஸ் ரோஜர்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட், இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் சார்லோட்டே எட்வர்ட்ஸ் ஆகியோர் மற்ற 4 கிரிக்கெட் வீரர், வீராங்கனை ஆவர்.
ஷிகர் தவண், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 5 ஆட்டங்களில் விளையாடி இரண்டு சதங்கள் உள்பட 363 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். அதை அங்கீகரிக்கும் வகையில் ஷிகர் தவணை 2013-ம் ஆண்டின் தலைசிறந்த 5 வீரர்களில் ஒருவராக தேர்வு செய்துள்ளது விஸ்டன்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் சிறந்த பங்களிப்பை கொடுத்ததற்காக ரோஜர்ஸ், ஹாரிஸ், ரூட் ஆகியோரை தேர்வு செய்துள்ளது விஸ்டன். சமீபத்தில் நடைபெற்ற டி20 மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியை இறுதிச்சுற்றுவரை அழைத்து சென்றதற்காக அதன் கேப்டன் எட்வர்ட்ஸ் தலைசிறந்த 5 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.