விளையாட்டு

டெஸ்ட் தரவரிசை: இந்தியாவின் 2-வது இடத்துக்கு சிக்கல்

செய்திப்பிரிவு

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, அந்த இடத்தை இழக்க நேரிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்திய அணி இப்போது தரவரிசையிலும் பின்னடைவை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

வரும் வியாழக்கிழமை தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும்பட்சத்தில், இந்தியா 2-வது இடத்திலிருந்து 3-வது இடத்துக்கு தள்ளப்படும். 111 ரேட்டிங் புள்ளிகளுடன் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா 2-வது இடத்துக்கு முன்னேறும். அதேநேரத்தில் 133 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்தாலும்கூட அதன் தரவரிசையில் எவ்வித மாற்றமும் இருக்காது.

இந்திய அணி வரும் 14-ம் தேதி வெலிங்டனில் தொடங்கவுள்ள நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தோற்கும்பட்சத்தில், ஆஸ்திரேலியா தொடரை டிரா செய்தாலே 2-வது இடத்தைப் பிடித்துவிடும். தென் ஆப்பிரிக்காவிடம் ஆஸ்திரேலியா தொடரை இழக்கும்பட்சத்தில் டெஸ்ட் தரவரிசையில் எவ்வித மாற்றமும் இருக்காது.

SCROLL FOR NEXT