விளையாட்டு

4-வது ஒருநாள்: நியூஸி.க்கு 279 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

செய்திப்பிரிவு

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.

ஹாமில்டன் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸை வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இந்திய அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக அம்பாடி ராயுடுவும், ரெய்னாவுக்கு பதிலா பின்னியும் சேர்க்கப்படிருந்தனர்.

ரோஹித் சர்மாவுடன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் வந்த ரஹானேவும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ராயுடு, சர்மாவுடன் இணைந்து அணியை மீட்கும் முயற்சியில் இறங்கினர். 25 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை இந்தியா எடுத்தது. 26-வது ஓவரில் பென்னெட்டின் பந்தில் ராயுடு 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

72 பந்துகளில் அரை சதத்தைக் கடந்த ரோஹித் சர்மா, கேப்டன் தோனியுடன் இணைந்து தனது பொறுப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார். 94 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடித்த சர்மா, 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆட வந்த அஸ்வின், முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தாலும், அவர் சந்தித்த 3-வது பந்தில் ஆட்டமிழந்தார்.

ஜடேஜா - தோனி அபாரம்

பின்னர் ரவீந்த்ர ஜடேஜாவுடன் கைகோர்த்த தோனி, அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இருவரும் நியூசி. பந்துவீச்சாளர்களை அசாதாரணமாக எதிர்கொண்டனர். இந்த இணை கடைசி 10 ஓவர்களில் மட்டும் 100 ரன்களைக் குவித்தது. இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்தது. கேப்டன் தோனி 79 ரன்களுடனும், ஜடேஜா 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

279 ரன்கள் வெற்றி இலக்கை துரத்தி வரும் நியூசி. அணி 8.1 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.

ஏற்கனவே நியூசி. அணி இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டது. மூன்றாவது ஒருநாள் சமனில் முடிந்தது. இந்த நிலையில், இந்தியா இன்று வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்யும் வாய்ப்பு உள்ளது.

SCROLL FOR NEXT