ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்று வந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. இதில் ரஷ்யா அதிகபட்சமாக 13 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் என 33 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. ஒட்டுமொத்தமாக 26 பதக்கங்களை வென்ற நார்வே இரண்டாவது இடத்தையும், 25 பதக்கங்களை வென்ற கனடா 3-வது இடத்தையும் பிடித்தது. அமெரிக்காவுக்கு 4-வது இடம் கிடைத்தது.
பிப்ரவரி 7 முதல் 23-ம் தேதி வரை தொடர்ந்து 16 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் 88 நாடுகளைச் சேர்ந்த 2873 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்ததால் ரஷ்ய அரசு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. எவ்வித அசம்பாவிதமும் இன்றி போட்டிகள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடிந்தன.
இந்தியாவில் இருந்து இப்போட்டியில் 3 வீரர்கள் பங்கேற்றனர். எனினும் அவர்களால் பதக்கம் எதையும் வெல்ல முடியவில்லை. தொடக்க விழாவைப் போலவே நிறைவு விழாவிலும் வண்ணமயமான வாண வேடிக்கைகளும், பிரமாண்டமான கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன. அடுத்த குளிர்கால ஒலிம்பிக் தென்கொரியாவில் பியாங்சாங் நகரில் 2018-ம் ஆண்டு நடைபெறவுள்ளது.