விளையாட்டு

குறுகிய காலத்தில் கோலி இந்திய அணிக்காக அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார்: கங்குலி புகழாரம்

செய்திப்பிரிவு

தனது கேப்டன்சி காலத்தில் ஆக்ரோஷமான, உறுதியான அணுகுமுறைக்குப் பெயர் பெற்ற கங்குலி, தன்னுடைய இத்தகைய தன்மைகளை விராட் கோலியிடம் அடையாளம் காண்கிறார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கங்குலி இது குறித்து கூறியதாவது:

“அடுத்த 10 ஆண்டுகளுக்கு நான் விளம்பரம் செய்யும் பிராண்ட் ஒன்று உண்டென்றால் அது விராட் கோலி ரக பேட்டிங்காகவே இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளில் அவர் நாட்டுக்காக ரன்களை பெரிய அளவில் குவிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நிச்சயம் அவர் தொடர்ந்து சிறப்பாக ஆடுவார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அவர் ஒரு ஆச்சரியகரமான வீரர்.

குறுகிய காலத்தில் இந்திய அணிக்காக அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார் கோலி. அவர் தனது தீவிரம், உணர்வு, வெற்றிக்கான வேட்கை மூலம் இந்திய கிரிக்கெட்டின் மதிப்பை நிச்சயம் உயர்த்த முடியும்.

அவர் பேட்டிங்கிற்கு களமிறங்கும் போதும், அணியை வழி நடத்தும் போதும் இத்தகைய குணாதிசியங்களை அவரது முகத்தில் அடையாளம் காண முடிகிறது. இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஒரு பெரிய கூடுதல் பலம்.

நியூஸிலாந்து அணி பற்றி..

இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம் என்பதை நியூஸிலாந்து அறிந்தே வைத்திருப்பர், ஆனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுடன் ஒப்பிடும்போது இங்கிலாந்துக்கு அடுத்தது நியூஸிலாந்து 2-வது சிறந்த அணியாகும்.

இவ்வாறு கூறினார் கங்குலி.

SCROLL FOR NEXT