விளையாட்டு

குத்துச்சண்டையிலும் பதக்க வாய்ப்பு முடிந்தது: கால் இறுதியில் விகாஸ் கிரிஷன் தோல்வி

பிடிஐ

ஒலிம்பிக் போட்டி தொடங்கி 11 நாட்கள் ஆன நிலையிலும் இந்தியாவுக்கு இதுவரை ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை. துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், வில்வித்தை ஆகிய பதக்க வாய்ப்பு உள்ள விளையாட்டுகளில் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குத்துச்சண்டை யிலும் பதக்க வாய்ப்பு இல்லாமல் போனது. கால் இறுதிக்கு நுழைந்து இருந்த ஒரே இந்திய வீரரான விகாஸ் கிரிஷனும் தோல்வியடைந்து அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.

மிடில் வெயிட் 75 கிலோ பிரிவு கால் இறுதியில் விகாஸ் கிரிஷன் உஸ்பெகிஸ்தான் வீரர் மெலிக்குஷிவை எதிர்கொண்டார்.

இதில் விகாஸ் கிரிஷன் 0-3 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை சந்தித்தார். உலக வரிசையில் 3-வது இடத்தில் உள்ள மெலிக்குஷியின் அபாரமான தாக்குதல் ஆட்டத்துக்கு முன்னால் அவரால் விகாஸ் கிரிஷனால் தாக்குப்பிடிக்க முடியாமல் போனது. இந்த ஆட்டத்தில் ஒருவேளை விகாஸ் கிரிஷன் வெற்றி பெற்றிருந்தால் வெண்கலப் பதக்கமாவது உறுதி செய்யப்பட்டி ருக்கும். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் போனது.

மற்ற இந்திய வீரர்களில் மனோஜ் குமார் லைட் வெல்டர் வெயிட் 64 கிலோ எடை பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றிலும், ஷிவ தாபா பாந்தம் வெயிட் 56 கிலோ எடை பிரிவில் தொடக்க சுற்றிலும் தோற்று வெளியேறி இருந்தனர்.

கடந்த 2 ஒலிம்பிக்கிலும் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்தது. 2008-ல் விஜேந்தர்சிங்கும், 2012-ல் மேரிகோமும் வெண்கலப் பதக்கம் பெற்றனர். இந்த முறை 3 வீரர்கள் பங்கேற்ற நிலையில் வெறும் கையுடன் திரும்புகின்றனர்.

தோல்வி குறித்து விகாஷ் கிரிஷன் கூறும்போது,

‘‘கால் இறுதி யில் தோல்வியடைந்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள் கிறேன். முதல் சுற்றை இழந்த நிலையில் அதில்இருந்து மீண்டுவர கடினமாக இருந்தது. அப்போதே போட்டி கையைவிட்டு சென்று விட்டதாக உணர்ந்தேன். நாட்டின் சுதந்திரதினத்தன்று இந்தியா வுக்காக பதக்கம் பெற்றுத்தர வேண்டும் என விரும்பினேன்.

ஆனால் நான் தோல்வியடைந்துவிட்டேன். இந்த ஆட்டத்தில் நான் சிறப்பாகதான் செயல்பட்டேன். இடது, வலதுபுறம் தாக்குதல் தொடுத்தேன். ஆனால் வெற்றி காணமுடியவில்லை. அதே வேளையில் மெலிக்குஷி ஆதிக்கம் செலுத்தினார்’’ என்றார்.

SCROLL FOR NEXT