விளையாட்டு

சந்தர்பால் சாதனை சதம்; 367 ரன்கள் குவித்தது மே.இ.தீவுகள்

செய்திப்பிரிவு

நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 116.2 ஓவர்களில் 367 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. டெஸ்ட் போட்டியில் 29-வது சதத்தைப் பூர்த்தி செய்த சந்தர்பால் மேற்கிந்தியத் தீவுகள் அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவினார்.

நியூஸிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் முதல் நாளான வியாழக்கிழமை ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. சந்தர்பால் 94 ரன்களுடனும், கேப்டன் டேரன் சமி ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.

2-வது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கேப்டன் டேரன் சமி 3 ரன்களில் ஆட்டமிழந்தார். வெள்ளிக்கிழமை 30-வது பிறந்த நாளைக் கொண்டாடிய சமி 3 ரன்களில் வெளியேறி யது ஏமாற்றமாக அமைந்தது.

சந்தர்பால் 29-வது சதம்

இதையடுத்து சுநீல் நரேன் களம்புகுந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய சந்தர்பால், டிம் சௌதி பந்துவீச்சில் பவுண்டரி அடித்து சதம் கண்டார். 188 பந்துகளில் 11 பவுண்டரிகள் உதவியுடன் சதத்தை எட்டினார் சந்தர்பால். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 29-வது சதமாகும்.

இதனிடையே சுநீல் நரேன் 2 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீராசாமி பெரு மாள் 20, டினோ பெஸ்ட் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மேற்கிந்தியத் தீவுகளின் முதல் இன்னிங்ஸ் 116.2 ஓவர்களில் 367 ரன்களோடு முடிவுக்கு வந்தது. சந்தர்பால் 229 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 122 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூஸிலாந்து தரப்பில் டிம் சௌதி 4 விக்கெட்டுகளையும், கோரே ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

நியூஸிலாந்து 156/3

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரூதர்ஃபோர்டு 10, பீட்டர் ஃபுல்டான் 11 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், கேன் வில்லியம்சன்-ராஸ் டெய்லர் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது. 148 பந்துகளைச் சந்தித்த வில்லியம்சன் 5 பவுண்டரி களுடன் 58 ரன்கள் எடுத்தார். இதையடுத்து கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் களம்புகுந்தார். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து 64 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. ராஸ் டெய்லர் 133 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 56, பிரென்டன் மெக்கல்லம் 23 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் சுநீல் நரேன் 2 விக்கெட்டுகளையும், டேரன் சமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT