ரியோ ஒலிம்பிக் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற பியூயோர்டோ ரிகோவின் மோனிகா, தனது நாட்டுக்கு முதல் தங்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்.
தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள மோனிகா இறுதிப்போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை 6-4, 4-6, 6-1 என்ற செட்களில் வீழ்த்தி தங்கப் பதக்கம் கைப்பற்றினார். இதன் மூலம் பியூயோர்டோ ரிகோவின் ஒலிம்பிக் வரலாற்றில் முதல் தங்கம் வென்றவர் என்ற சாதனையை மோனிகா படைத்துள்ளார். ஒட்டுமொத்த ஒலிம்பிக் வரலாற்றில் பியூயோர்டோ ரிகோ வெல்லும் 9-வது பதக்கம் இதுவாகும்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடாலின் தங்கப் பதக்கம் வெல்லும் கனவு கலைந்தது. 4-ம் நிலை வீரரான அவர் அரை இறுதியில் 7-5, 4-6, 6-7 என்ற செட்களில் 141-வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவின் ஜூவான் மார்டின் டெல் போர்டா தோல்வியடைந்தார். லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முர்ரே இறுதிப்போட்டியில் ஜூவான் மார்டினை எதிர்கொள்கிறார்.