விளையாட்டு

சரணடைந்தது பஞ்சாப்: சாம்பியன்ஸ் லீக் இறுதியில் ’அதிரடி’ சென்னை

செய்திப்பிரிவு

சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், சென்னையிடம் 65 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம், சாம்பின்ஸ் லீக் தொடரில் இரண்டாவது முறையாக சென்னை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் சென்னை கொல்கத்தாவை சந்திக்கவுள்ளது.

சென்னை நிர்ணயித்த 183 ரன்கள் இலக்கை விரட்ட வந்த பஞ்சாப் அணி 2-வது ஓவரிலேயே சேவாக்கை இழந்தது. தொடர்ந்து சாஹா, மேக்ஸ்வெல், வோரா, பெய்லி, பெரேரா என அதிரடி ஆட்டக்காரட்கள் அனைவரும் வரிசையாக ஆட்டமிழக்க, 8-வது ஓவரின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்களை மட்டுமே பஞ்சாப் எடுத்திருந்தது.

மில்லர் பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்து நம்பிக்கை அளித்தாலும், கைவசம் விக்கெட் இல்லாததால் பஞ்சாபின் வெற்றி கேள்விக்குறியாகவே இருந்தது. மில்லரும் 22 ரன்களுக்கு அஸ்வின் பந்தில் ஆட்டமிழக்க சென்னை வெற்றி பெறுவது உறுதியானது.

பொறுமையாக ஆடிய பஞ்சாபின் அக்‌ஷர் படேல், அணியை கவுரவமான ஸ்கோரை நோக்கி வழிநடத்தினார். 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தபோது ரெய்னாவின் பந்தில் படேலும் ஆட்டமிழந்தார். மேலும் சிறிது தாக்குபிடித்த பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சென்னையின் நேஹ்ரா, மோஹித் சர்மா, நெகி, ரெய்னா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக பிராவோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் அணி சென்னையை பேட்டிங் செய்ய அழைத்தது. பவர்ப்ளே முடியும் முன்னரே சென்னை அணி 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 4-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ப்ளேஸ்ஸி மற்றும் பிராவோ ஜோடி மெதுவாக ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

33 பந்துகளில் 46 ரன்கள் குவித்திருந்த ப்ளெஸ்ஸி படேல் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் பிராவோ தனது அதிரடியைத் தொடர்ந்தார். 29 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸருடன் பிராவோ அரைசதத்தைக் கடந்தார். 17-வது ஓவரில், நெகி மற்றும் தோனி அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க அந்த ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்திருந்தது.

பிராவோ 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜடேஜா தன் பங்கிற்கு 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாச சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்களைக் குவித்தது.

யாரும் கவனிக்காத அவானாவின் ஹாட்ரிக்

பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் அவானா தனது இரண்டாது ஓவரின் இரண்டாவது பந்தில் டேவோன் ஸ்மித்தை வெளியேற்றினார். தொடர்ந்த பந்துவீசிய அவானா, தனது மூன்றாவது ஓவரின் கடைசி பந்தில் ரெய்னாவை ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்தடுத்து பந்துவீச்சாளர்கள் மாற்றப்பட சென்னை தனது அதிரடி ஆட்டத்தை துவங்கியது.தனக்கு மீதமிருந்த ஒரு ஓவரை, ஆட்டத்தின் 17-வது ஓவரில் வீசி முடிக்க அவானா மீண்டும் வந்தார். முதல் பந்தில் நெகி பவுல்டாக, அடுத்த பந்தை சந்தித்த சென்னையின் கேப்டன் தோனி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தனது முந்தைய ஓவரின் கடைசி பந்தில் ஒரு விக்கெட்டையும், தொடர்ந்த அடுத்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியதால் அவானா ஹாட் ட்ரிக் சாதனை படைத்தார். ஆனால் மைதானத்தில் இருந்த யாரும் இதை கவனித்ததாகத் தெரியவில்லை.

SCROLL FOR NEXT