புனே டெஸ்ட்டில் மோசமாக விளையாடியதை போன்று இனிமேல் விளையாடமாட்டோம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உறுதியளித்தார்.
அணிச்சேர்க்கைப் பற்றி பிடிகொடுக்காமல் பேசிய விராட் கோலி, நிச்சயம் ஒரு சில ஆச்சரியங்கள் இருக்கும் என்றார்.
இதுதொடர்பாக பெங்களூருவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மோசமான செயல்பாட்டை நீங்கள் மீண்டும் பார்க்க வேண்டியது இருக்காது. இதை நான் உறுதியாக கூறுகிறேன். புனே ஆட்டத்தில் நாங்கள் நோக்கம் இல்லாமல் விளையாடியதால் தோல்வியடைந்தோம். ஆஸ்திரேலியா சிறந்த கிரிக்கெட்டை விளையாடியது. தோல்வியை ஏற்றுக்கொள்வது முக்கியம். அகங்காரத்துடன் செயல்பட்டால் அது நம்மை பாதிக்கும்.
சில நேரங்களில் தோல்வியுடம் தேவைப்படுகிறது. எந்த விஷயத்தில் நாம் பின்தங்கியுள்ளோம் என்பதை அறிந்துள்கொள்வதற்கு, இது அடித்தளமாக அமையும். ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக செயல்படாதது கடந்த ஆட்டத்தில் அரிதாக நடைபெற்றது. இந்த தோல்வியில் இருந்து நாங்கள் அதிகம் கற்றுள்ளோம்.
தோல்வியோ அல்லது வெற்றியோ எங்களது போட்டி தயாரிப்பும், தீவிரமும் ஒரே மாதிரியாகவே இருக்கும். போட்டியின் முடிவை பொறுத்து பயிற்சி முறைகளில் மாற்றம் செய்ய வேண்டியதில்லை.
எல்லாவிதமாக சாத்திய கூறுகளையும் ஆராய்ந்தே அணி சேர்க்கையை முடிவு செய்யும். நிச்சயம் ஒரு சில ஆச்சர்யங்கள் இருக்கும். ஹர்திக் பாண்டியாவுக்கு தோள்பட்டையில் வலி உள்ளது. இதனால் அவர் அணியில் இடம் பெறமாட்டார். அணியில் உள்ள மற்ற வீரர்கள் அனைவரும் உடல் தகுதியுடன் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மீது மட்டும் நாங்கள் கவனம் செலுத்த மாட்டோம். அந்த அணிக்கு எதிராக வெற்றி பெற ஒட்டுமொத்த அணியாக சிறப்பாக விளையாடுவோம். எப்போதும் எங்களது கவனம் ஒரு வீரர் மீது மட்டும் இருக்காது. டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமானால் இரு முறை 10 விக்கெட்களை வீழ்த்த வேண்டும். இதை ஏற்கெனவே நாங்கள் செய்துள்ளோம்.
மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் திடீரென கூடுதல் மாறுபாடு இருக்கும் என நான் நினைக்கவில்லை. அவர் ஒரு பந்து வீச்சாளர். இதை ஏற்றுக்கொண்டு அவருக்கு எதிராக சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட வேண்டும்.
நாங்கள் நெருக்கடியுடன் இருப்பதாக ஸ்மித் கூறியுள்ளார். அது அவரது கருத்து, அவர் விரும்புவதை தெரிவிக்கலாம். எங்கள் திறமைகள் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. ஆஸ்திரேலியா என்ன கூறுகிறது என்பது பற்றி கவனம் செலுத்தத் தேவையில்லை. செய்தியாளர்கள் சந்திப்பில் இத்தகைய உத்திகளை அவர்கள் கடைபிடிப்பதில் சிறந்தவர்கள் என்பதை நான் அறிவேன்.
கடந்த 2 ஆண்டுகளில் எத்தகைய கிரிக்கெட் ஆட்டத்தை ஆடி வந்தோமோ அதையேதான் தொடரப்போகிறோம். 4-வது போட்டி முடிந்தவுடன் தொடர் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்ப்போம்.
பெங்களூருவில் நான் அதிக ஆட்டங்கள் விளையாடி உள்ளேன். இந்த ஆடுகளம் மாறியிருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். இதில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை. டெஸ்ட் போட்டிகளில் இங்கு சிறப்பாகவே விளையாடி உள்ளோம். கடைசியாக ஆஸ்திரேலியாவை இந்த ஆடுகளத்தில் வீழ்த்தி உள்ளோம். இவைகள் பெரிய அளவில் எங்களுக்கு ஊக்கம் அளிக்கும். இந்த ஆடுகளம் எப்படி செயல்படும், அதற்கு தகுந்தபடி என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம்.
ஜெயந்த் யாதவ் சிறந்த வீரர். ஒரே ஒரு தொடரில் மட்டுமே விளையாடி உள்ள அவருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. அறிவார்ந்த திறனுடன் செயல்படக்கூடிய அவர் சிறப்பான செயல்பாட்டின் மூலமே அணிக்குள் நுழைந்துள்ளார்.
இவ்வாறு விராட் கோலி கூறினார்.