தொடக்க காலத்தில் வீட்டில் கணினியை வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் பின்னர் அதன் அவசியத்தைப் புரிந்துகொண்டு கணினியை வாங்கிப் பயன்படுத்தியதாகவும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
அவிவா லைப் இன்சூரன்ஸ் சார்பில் 'உங்களுடைய பெரிய திட்டம் என்ன' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டெண்டுல்கர் கூறியதாவது:
கடந்த 12, 13 ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டில் ஒரு கணினியை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு என்னை சிலர் கேட்டுக் கொண்டார்கள். அதில் அனைத்து தகவல்களையும் சேமித்து வைத்து, தேவைப்படும்போது பார்க்கலாம் என்று சொன்னார்கள்.
நான் அதற்கு முன்பு கணினி இல்லாமலேயே சுமார் 12 ஆண்டுகள் விளையாடி விட்டதால், எனது அறையில் கணினி என்ன செய்யப் போகிறது என்று அப்போது கேள்வி எழுப்பினேன்.
கணினி எனக்காக கிரிக்கெட் மட்டையைப் பிடித்து விளையாடாது, ஜாகீர் கானுக்காகவோ, ஹர்பஜனுக்காகவோ பந்து வீசாது என தெரிவித்தேன். ஆனால், சிறிது காலத்துக்குப் பிறகு கணினியில் சேமித்து வைக்கும் தகவல்களை சில விநாடிகளில் மீண்டும் பார்க்க முடியும் என உணர்ந்தேன்.
அதாவது, கடந்த 1997, 1999-ல் ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் நான் எப்படி விளையாடினேன் என விரும்பினால் 5 விநாடிகளில் பார்க்க முடியும். இதனால் என்னுடைய நிறை குறைகளை ஆய்வு செய்து அதற்கேற்ப விளையாட முடியும் என்பதை உணர்ந்து 2002-03-ல் கணினியை வாங்கினேன்.
எதிர் அணியினரின் பலம் மற்றும் பலவீனங்களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிடுவதற்கு கணினி பேருதவியாக இருந்தது. புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொண்டதால் மேலும் சிறப்பாக விளையாட முடிந்தது என்றார் டெண்டுல்கர்.
பின்னர் குழந்தைகளுடன் உரையாடிய சச்சின், எதிர்காலம் குறித்து கனவு கண்டு அதை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்று அவர்களிடம் தெரிவித்தார்.
"வாழ்க்கையில் மிகப்பெரிய திட்டம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எனக்கு 10 வயது இருக்கும்போது, அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்று தெரியாது. ஆனால், எனக்கு ஒரு திட்டம் இருந்தது. நீங்களும் இலக்கை நிர்ணயித்துக் கொண்டு செயல்படுங்கள்" என்றார்.
என்னவாக விரும்பினாலும் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என எனது குழந்தைகளிடம் எப்போதுமே கூறி வருகிறேன். எனது மகள் டாக்டராகவும், மகன் கிரிக்கெட் வீரராகவும் விரும்புகிறார்கள் என்றார் சச்சின்.