ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பேட்டிங் பலம் வாய்ந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.
இதுவரை தான் விளையாடியது இரு போட்டிகளிலும் கடினமான இலக்கை எட்டி வெற்றி பெற்றுள் ளது பஞ்சாப். அதே நேரத்தில் தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ஹைதராபாத் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் அணியில் மேக்ஸ் வெல், டேவிட் மில்லர் ஆகியோர் எதிரணியை மிரட்டும் வகையில் பேட்டிங் செய்து வருகின்றனர். முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்த 206 ரன்கள் என்ற இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது பஞ்சாப். இந்த ஆட்டத்தில் மேக்ஸ்வெல் 43 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார். மில்லர் 37 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இதேபோல ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 192 ரன்கள் என்ற இலக்கை 18.5 ஓவர்களிலேயே பஞ்சாப் எட்டியது. இந்த ஆட்டத்திலும் மேக்ஸ்வெல், மில்லர் ஆகியோர் அதிரடியாக விளையாடி முறையே 89,51 ரன்கள் எடுத்தனர். இந்த ஆட்டத்தில் புஜாரா 40 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங் பலம் வாய்ந்த அணியாக பஞ்சாப் உருவெடுத்துள்ளது.
அதே நேரத்தில் ஹைதராபாத் அணியில் வார்னர், பிஞ்ச், ஷீகர் தவாண், சமி உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர் என்றாலும் முதல் ஆட்டத்தில் அவர்கள் யாரும் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வீரர்கள் 20 ஓவர்களில் 133 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனினும் முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்குடன் இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி வீரர்கள் களம் இறங்குவார்கள் என்பதால், பஞ்சாப் அணிக்கு சவால் அளிக்கும் விதமாகவே அவர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி நேரம்: இரவு 8, நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ், செட் மேக்ஸ்.